எடப்பாடி மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றதா?

139 0

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஜூன் 23 மற்றும் ஜூலை 11-ந்தேதிகளில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு எப்படி தீர்ப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் முடிவைத்தான் மலைபோல் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதுவரை அ.தி.மு.க. உள்கட்சி சண்டை விவகாரத்தை கண்டு கொள்ளவே இல்லை. பொதுவாக அரசியல் கட்சிகள் தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பி வைத்தால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதில் தெரிந்து விடும்.

ஆனால் அ.தி.மு.க. மோதல் விவகாரத்தில் மூன்று மாதம் ஆகப்போகும் நிலையில் தேர்தல் ஆணையம் ‘கப்-சிப்’ என்று இருக்கிறது. இது என்ன… கிணற்றில் போட்ட கல் மாதிரி இருக்கிறார்கள் என்று, சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போட்ட பட்டியலை கொண்டுபோய் கொடுத்தனர். இதையும் தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விட்டதாம். என்ன காரணம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு விசாரித்த போது ஒரு புதிய தகவல் வந்துள்ளது. அதாவது அ.தி.மு.க. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்தப்படும் போது மாவட்டம் வாரியாக உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்குவார்களாம்.

அதை தனித்தனி புத்தகமாக தொகுத்து அதன் நகலைத்தான் டெல்லிக்கு கொண்டு போய் கொடுப்பார்களாம். அதனுடன் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இணைக்கப்பட்டு இருக்குமாம். இந்த நடைமுறை தற்போது இல்லை என்ற காரணத்தினால்தான் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மவுனமாக இருக்கிறார்களாம். இதை அறிந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு தலைவர்கள் சற்று அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் எந்த தவறும் இல்லாமல் கச்சிதமாக செயல்பட ஆலோசித்து வருகிறார்கள்.