பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், நீண்டநாட்களாக விளக்கமறியலிலும், தடுப்புக் காவலின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவர் சார்பிலும், மேன் முறையீட்டு நீதிமன்றில் பிணை கோரும் மனுக்களை தாக்கல் செய்ய இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தயாராகி வருகின்றது.
இதற்கான நடவடிக்கைகளை அவ்வாணைக் குழுவின் அறிவுறுத்தல் பிரகாரம் சட்டத்தரணிகள் முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த மனுக்கள் எதிர்வரும் ஒக்டோபர் ஐந்தாம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்தார்.
பம்பலபிட்டியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தலைமை அலுவலகத்தில், சிவில் சமூக பிரதி நிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இது குறித்த தகவல்களை வெளிப்படுத்தினார்.
தற்போதும், அமுலில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் மிக ஆபத்தானது என்பதை இதன்போது விளக்கிய ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க, யார் பயங்கரவாதி எனும் வரைவிலக்கணம் கூட இல்லாத நிலையில் அச்சட்டம் யாரையும் இலக்காக கொள்ளலாம் என சுட்டிக்காட்டினார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு குறித்த சட்டம் தொடர்பில் முன்னெடுத்த ஆய்வுகளின் போது, அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெரும்பாலானோருக்கு குற்றப் பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்பது தெரியவந்ததாக நீதியரசர் ரோஹினி மாரசிங்க குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையிலேயே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, நீண்டகாலமாக விளக்கமறியலிலும், தடுப்பு முகாம்களிலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவர் தொடர்பிலும் பிணைக் கோரி மனுக்களை, மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கான வேலைகளை சட்டத்தரணிகள் ஊடாக முன்னெடுத்துள்ளதாக அவர் விபரித்தார்.
தற்போதும் தடுப்பு முகாம்களுக்கு சென்று வழக்கு தாக்கலுக்கு தேவையான விபரத் திரட்டுகளை சட்டத்தரணிகள் முன்னெடுத்துள்ளதாகவும், எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் பிணை மனுக்களை தாக்கல் செய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் நீதியரசர் ரோஹினி மாரசிங்க குறிப்பிட்டார்.
சிவில் சமூக பிரதிநிதிகலுடனான சந்திப்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் ரோஹினி மார்ச்சிங்க, ஆணையாளர்களான நிமல் கருணாசிரி, விஜித்த நாணயக்கார, அனுஷியா சண்முகநாதன், பணிப்பாளர்களான சுலாரி மற்றும் மேனகா உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டதுடன், 40 இற்கும் அதிகமான சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.