இருபதுக்கு – 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் சம்பியனாகுவதற்கு முயற்சி

109 0

பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகத் திறமையாக விளையாடி சம்பியனாவதற்கு முயற்சிப்பதாக இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தப்பத்து தெரிவித்தார்.

பங்களாதேஷில் அக்டோபர் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மகளிர் இருவது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து இன்று புதன்கிழமை (28) அதிகாலை புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘மகளிர் இருபது ஆசிய கிண்ணத்திற்கான கடந்த 3 அத்தியாயங்களில் எமது அணி பிரகாசிக்கத் தவறியது. எனினும் இந்த வருடம் எம்மால் சிறந்த நிலையை அடை முடியும் என நம்புகிறேன். அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளுடன் வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ள இளம் வீராங்கனைகளும் அணியில் இடம்பெறுகின்றனர்.   எனவே எம்மால் வெற்றிபெற முடியும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பத்தில் அணிக்கு 50 ஓவர்களாக நடத்தப்பட்டது. முதல் 4 அத்தியாயங்களிலும் (2004, 2005, 2006, 2008) இந்தியா சம்பியனானதுடன் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றது.

அதன் பின்னர் இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் (2012, 2014), பங்களாதேஷும் (2018) சம்பியனாகின.

இம்முறை நடப்பு சம்பியன் பங்ளாதேஷ், முன்னாள் சம்பியன் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் அகிய 7 நாடுகள் லீக் அடிப்படையில் ஒன்றையொன்று எதிர்த்தாடும்.

லீக் போட்டிகள் அக்டோபர் 1ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறும்.

லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அக்டோபர் 13, 14ஆம் திகதிகளில் நடைபெறும் அரை இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதிபெறும். இறுதிப் போட்டி அக்டோபர் 15ஆம் திகதி நடைபெறும்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியில் இடம்பெறும் வீராங்கனைகளில் அணித் தலைவி சமரி அத்தபத்து சிரேஷ்ட வீராங்கனை ஆவார். சர்வதேச இருபது 20 மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக சதம் குவித்த ஒரே ஒருவரான சமரி, 2000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதலாவது இலங்கை வீராங்கனை என்ற பெருமையையும் கொண்டுள்ளார். அவர் 96 இன்னிங்ஸ்களில் 2079 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

மற்றைய சிரேஷ்ட வீராங்கனைகளில் சுழல்பந்துவீச்சாளர் இனோகா ரணவீர 55 விக்கெட்களைக் கைபற்றியுள்ளார். சகலதுறை வீராங்கனை ஓஷாதி ரணசிங்க 273 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் 45 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். ஹாசினி பெரேரா 465 ஓட்டங்களையும் அனுஷ்கா சஞ்சீவனி 416 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். சுகந்திகா 30 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இவர்கள் அனைவரும் இலங்கை அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மகளிர் குழாம்

சமரி அத்தபத்து (தலைவி), ஹாசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, காவீஷா டில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, கௌஷினி நுத்யங்கா, ஓஷாதி ரணசிங்க, மல்ஷா ஷெஹானி, மதுஷிகா மெத்தானந்த, இனோக்கா ரணவீர, ரஷ்மி சில்வா, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரிய, தாரிகா செவ்வந்தி.