2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடல்

107 0

கோதுமை மா, முட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலையேற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள 2000 ற்கும் மேற்பட்ட பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

இவ்வாறு பேக்கரிகள் மூடப்பட்டு வருவதால் இத்தொழிலை நம்பி தமது வாழ்க்கை நடத்தி வந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலையேற்றம் காரணமாக கொழும்புக்கு வெளியே உள்ள பேக்கரிகளே அதிகளவில் மூடப்பட்டுள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாரிய பேக்கரிகளே அப்பகுதிகளில் இயங்பி வருகின்றன.

கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் பாரிய அளவிலான பேக்கரிகளுக்கு மாத்திரமே கோதுமை மாவை விநியோகிப்பதாகவும், சிறிய பேக்கரிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே இயங்கி வருவதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மா தட்டுப்பாட்டின் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான கோது‍மை உற்பத்தியிலான உணவுப் பொருட்களை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத் துறைக்கும் நெருக்கடி ஏற்பட்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.