பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது

161 0

தம்புத்தேகம தனியார் வங்கிக்கு முன்பாக 223 இலட்சம் ரூபா கொள்ளையிட முயற்சித்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக சுமார் 22.3 மில்லியன் ரூபாவை கொண்டு வந்த போது அதனை கொள்ளையிட இருவர் முயற்சி செய்திருந்தனர்.

முகமூடி அணிந்த இருவர் குறித்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

இதன்போது வர்த்தகரின் கையில் இருந்த இரண்டு பணப் பைகளை எடுத்துக்கொண்டு ஓட முற்பட்ட போது, ​​அந்த இடத்திற்கு அருகில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் இதனைக் கண்டுள்ளார்.

தம்புத்தேகம பொலிஸில் பணிபுரியும் சார்ஜன்ட் D.A.C புத்திக குமார, உடனடியாகச் செயற்பட்டு சந்தேகநபர்கள் இருவருக்கு முன்னால் பாய்ந்த, அவர்களின் வழியைத் தடுத்தார்.

எதிர்பாராமல் எதிரே வந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து தப்பிக்க சந்தேகநபர்கள் குறித்த அதிகாரியை மிளகாய் பொடியால் தாக்கியுள்ளனர்.

சந்தேகநபர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை செயற்படுத்திய போதும் அது செயற்படவில்லை என சார்ஜன்ட் புத்திக குமார எம்மிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்களில் ஒருவர், வர்த்தகர் பணத்தை வைப்பிலிட வருகை தந்த வங்கியின் தனியார் பாதுகாப்பு அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.

குறித்த இருவரிடம் இருந்து போரா 12 வகை துப்பாக்கி, அதற்கான தோட்டாக்கள் மற்றும் கத்தி ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.