முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பை எடுத்து 10 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முடித்திருத்தும் நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
கொலன்னாவை சாலமுல்ல லக்சந்த செவனவில் வசித்து வரும் கணேசன் ஜெகன் என்ற நபரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் சுகிஷ்வர பண்டார செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை நடத்தி சந்தேக நபரை கைது செய்ததாக டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக்கூடத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.கே. சேனாரத்ன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தனக்கு வேறு ஒரு நபரிடம் இருந்து 4 லட்சம் ரூபா கிடைக்க வேண்டியுள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள அவரது தொலைபேசி இலக்கம் என நினைத்து தொலைபேசி அழைப்பை எடுத்ததாகவும் சந்தேக நபர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
சந்தேக நபரின் இந்த தகவல் முன்னுக்கு பின் முரணானது என்பதால், தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.