யாழ். பல்கலை கழத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மத்தியிலையே மோதல் இடம்பெற்றுள்ளது. இம் மோதல் சம்பவங்களில் 10 மாணவர்கள்வரை காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
விஞ்ஞான பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்கலாச்சார முறைமை புறக்கணிக்கப்பட்டு சிங்கள கலாச்சார முறைமை பின்பற்றப்பட்டமையே மோதலுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
வழமைபோன்று குறித்த நிகழ்வில் தமிழ்கலாசார முறைப்படி மேளதாள வாத்தியங்களோடு மாணவர்களின் வரவேற்கு நிகழ்வு இடம்பெறுவதாகவும் இம்முறை வழமைக்கு மாறாக கண்டிய நடனத்துடன் குறித்த நிகழ்வு ஆரம்பமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கண்டிய நடனமே இம் மோதல் நிலைமைக்கு காரணம் என மாணவர்கள் குறிப்பிட்டனர்.குறித்த மோதல் சம்பவத்தால் யாழ்.பல்கலைகழக வளாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பதட்டம் ஏற்பட்டது.அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மோதல் சம்பவத்தை கட்டுப்படுத்தியதுடன் , காயமேற்பட்ட மாணவ , மாணவிகளை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளபோதிலும் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து மாணவர்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பல்கலைக்கழக விடுதிகள் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சூழ உள்ள பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதோடு வீதி ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையினையும் காணமுடிகிறது.அத்துடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.