அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் வழமையான செயற்பாடுகளுக்கு எவ்வித தடையும் இல்லை

167 0

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. எனினும் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

தற்போது யார் அதிகளவான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது என கட்சிகளுக்கிடையில் போட்டி நிலவுகிறது. அதன் காரணமாகவே பொலிஸாரிடம் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறு சட்ட ரீதியற்ற முறையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களினால் நாட்டில் அராஜக நிலைமையே ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான கால கட்டத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது மக்களின் உரிமையாகும். அதனை நாம் மதிக்கின்றோம். எனினும் அந்த ஆர்ப்பாட்டங்கள் பொது மக்களுக்கு அசௌகரித்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது.

சட்டத்தின் படி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாயின் அதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன்னரே பொலிஸாரிடம் அனுமதி பெற வேண்டும். எனினும் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் எந்தவொரு ஆர்ப்பாட்டத்திற்கும் இவ்வாறு பொலிஸாரிடம் அனுமதி பெற்றப்படுவதில்லை. இவ்வாறு சட்ட ரீதியற்ற முறையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களினால் நாட்டில் அராஜக நிலைமையே ஏற்படும்.

இதற்கு முன்னர் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது பாராளுமன்றத்தைக் கூட கைப்பற்ற சிலர் முயற்சித்தனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. இது போன்று செயற்படுபவர்களுக்கு எதிராக நிச்சயம் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இது மக்களின் கோபத்தைத் தூண்டும் நேரம் அல்ல.

தற்போது காணப்படுவது கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணப்பட்ட நிலைமை அல்ல. இன்று எந்த கட்சி அதிகளவில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றது என்ற போட்டி நிலைமை காணப்படுகிறது. இது போன்று கட்சிகளுக்கிடையில் காணப்படும் போட்டிகளால் மாணவர்களின் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய செயற்பாடுகள் பாதிப்பதற்கு இடமளிக்க முடியாது.

ஜனநாயக நாடொன்றில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். எனவே சட்டத்திற்கு முரணாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் சட்டத்தினால் முறியடிக்கப்படும்.

அதியுயர் பாதுகாப்பு வலயம் என்பது புதிய விடயமல்ல. எனவே இவற்றில் வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் எந்த தடையும் இல்லை. ஆனால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டத்தை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னர் இது குறித்த அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும். எனவே மக்களை பொறுப்புடனும் பொறுமையுடனும் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.