ஒப்டஸ் நிறுவனத்தின் கணிணி வலையமைப்பை இலக்குவைத்து சைபர் தாக்குதல்களை மேற்கொண்டவர்களை இனம் காண்பதற்காக வெளிநாட்டு சட்ட அமுலாக்கல் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாக அவுஸ்திரேலிய பொலிஸ் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய டெலிகொம் நிறுவனமான ஒப்டஸ் தனது கணிணி வலையமைப்பை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல்கள் காரணமாக தற்போதைய முன்னாள் வாடிக்கையாளர்கள் குறித்த தரவுகள் களவாடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது.
எண்ணிக்கை குறிப்பிட முடியாத அளவு வாடிக்கையாளர்களின் பெயர்கள் தொலைபேசி இலக்கங்கள் மின்னஞ்சல் முகவரிகள் கடவுச்சீட்டு வாகனசாரதி அனுமதிப்பத்திரங்கள் குறித்த விபரங்கள் பறிபோயுள்ளன.
இந்த சைபர் தாக்குதல் எப்போது இடம்பெற்றது என ஒப்டஸ் தெரிவிக்கவில்லை.
சிங்கப்பூரின் சிங்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஒப்டஸ் அவுஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகொம்ஸ் நிறுவனம் என்பதும் இ10 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச சட்ட அமுலாக்கல் பிரிவுகளுடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றவாளிகளை கண்டுபிடித்து அடையாள மோசடியிலிருந்து பாதுகாப்பதற்காக ஒப்பரேசன் ஹரிகேன் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய பொலிஸ் தெரிவித்துள்ளது.
தரவுகள் பறிபோனமை குறித்து அறிந்துள்ளோம் விசாரணைகள் இடம்பெறுகின்றன விசாரணையின் நேர்மையை பேணுவதற்காக மேலதிக தகவல்கள் எவற்றையும் நாங்கள் வெளியிடப்போவதில்லை என அவுஸ்திரேலிய பொலிஸ் தெரிவித்துள்ளது.
களவாடப்பட்ட தரவுகள் டார்க்வெப்பில் விற்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் சைபர் கொமாண்டின் துணை ஆணையாளர் ஜஸ்டின் கொவ் விசேட திறமையாளர்களை பயன்படுத்தி ஏஎவ்பி டார்க் வெப்பினை அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளார்.