ராஜபக்‌ஷர்கள் வஞ்சகர்கள் என்பதை ரணில் உணர்வார்

108 0

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததையும், ராஜபக்‌ஷர்கள் வஞ்சகர்கள் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் உணர்வார்  என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அத்துடன், கட்சி தலைவர்களின் அனுமதி இன்றியே தேசிய பேரவைக்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர் எனவும், மனோ கணேசன் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவரின் பெயர்கூட இடம்பெற்றுள்ளது எனவும் இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

அக்கரபத்தனை பகுதியில் நேற்று (25) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட ரீதியில் நல்லவர், இன்றும் அவரை நாம் மதிக்கின்றோம். ஆனால் அவர் இன்று இருக்கும் இடம்தான் சரியில்லை. அதாவது தனி ஆளாக இருப்பதால், செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்துள்ளார்.

ராஜபக்‌ஷர்கள்  வஞ்சகர்கள் என்பதையும் அவர் உணர்வார். மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜபக்‌ஷர்களின் சொல்கேட்டே ஜனாதிபதி ரணில் இதனை செய்துள்ளார்.

அரசாங்கத்தில் இணைவதற்கு எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மக்கள் ஆணை இல்லாத இந்த ஆட்சியை அங்கீகரிப்பதற்கு நாம் தயாரில்லை. சர்வதேச சமூகம்கூட இந்த அரசாங்கத்தை ஏற்கவில்லை. மக்கள் ஆணையுடன் புதிய அரசாங்கமொன்று அமைய வேண்டும். அவ்வாறு அமையும் அரசாங்கத்துக்கு நாம் ஆதரவு வழங்குவோம்.