ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா, பிரேசில் நாடுகள் நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிப்பதாக ரஷ்யா தெரிவித்ததுள்ளது.
ஐ.நா. பொதுச் சபையின் 77-வதுஆண்டுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பேசியதாவது:
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் பாதுகாப்புக் கவுன்சில் ஆகியவை சமகால உண்மைநிலவரங்களைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், அந்த கவுன்சிலை மேலும் ஜனநாயகப்படுத்த முடியும் என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடாகும்.
இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள். அவை பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் பெற முழுத் தகுதி உடையவை. எனவே, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்படுவதற்கு ரஷ்யா தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.