நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால் வைத்தியசாலை கட்டமைப்பு கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டே அரசாங்கம் இந்த விடயத்தில் அசமந்த போக்குடன் செயற்படுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் இதற்கு முன்னர் இல்லாதவாறு மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாதவாறு மருந்துகளின் விலைகள் பாரதூரமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இலவச மருத்துவ துறையை தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுப்பதற்காகவே அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தாமலுள்ளது.
மருந்து தட்டுப்பாட்டினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை கட்டமைப்புக்கள் வருட இறுதியில் 300 விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட மேலும் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் ஓய்வு பெறவுள்ளதால் பாரதூரமாக பாதிக்கப்படக் கூடும்.
எனவே வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு குறுகிய கால தீர்வு உகந்ததாகக் காணப்படாது. இதற்கு நீண்ட கால தீர்வு அத்தியாவசியமாகும்.
எனவே அரசாங்கம் அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். பொருளாதார நெருக்கடிகளால் சிறுவர் மந்த போஷனையும் நாட்டில் அதிகரித்துச் செல்கிறது. இவை தொடர்பில் வைத்தியர்கள் வெளிப்படுத்த முயற்சிக்கின்ற போதிலும் , அரசாங்கம் அதனை மறைப்பதற்கே முயற்சிக்கிறது என்றார்.