மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகள் நிர்வகிக்கப்படுகின்றமை தவறானது

91 0

மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகளை நிர்வகித்துச் செல்வது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என்பதோடு , அது பாரிய தவறுமாகும்.

இன்று அனைத்து மாகாணசபைகளையும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுனர்கள் தனித்து நிர்வகித்துக் கொண்டிருக்கின்றனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மாகாண ஆளுனர்கள் இன்றும் பதவியில் உள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் இன்றி இவர்கள் தனித்து மாகாணசபைகளை நிர்வகித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 9 ஆளுனர்களும் , அந்தந்த மாகாணங்களில் முழுமையாக நிதி முகாமைத்துவத்தை செய்து கொண்டிருக்கின்றனர்.

எந்தவொரு அரச நிறுவனத்தையும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி நடத்திச் செல்வதானது பாவமாகும். அது தவறுமாகும்.

இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் இன்றி உள்ளுராட்சி சபைகளும், மாகாணசபைகளும் நிர்வகிக்கப்படுகின்றமை மக்களின் அடிப்படை உரிமை மீறலாகும் என்று வழக்கொன்றில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனவே மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகளை நிர்வகித்துச் செல்வது முற்றிலும் சடத்திற்கு முரணானது. மக்களின் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் , முறைமைகளிலும் அரசியல்வாதிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

அனைவரும் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும். சவப்பெட்டியிலிருந்து கொண்டும் அரசியலும் ஜனநாயகமும் பேச வேண்டும். இவற்றை குரல் பதிவு செய்து நான் இறந்த பின்னர் அதனை ஒலிபரப்பச் செய்வேன் என்றார்.