மஹிந்த தலைமையில் மீண்டும் எமது அரசாங்கத்தை உருவாக்குவோம் – மஹிந்தானந்த சவால்

92 0

பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கின்றன.

இந்நிலையில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு டிசம்பர் மாதமளவில் தீர்வுகள் வழங்க முடியும் மேலும் நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வந்து கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதன் மூலம்  மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மீண்டும் எமது அரசாங்கத்தை உருவாக்குவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி உறுப்பினர்களை தெளிவுப்படுத்தும் நிகழ்வொன்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் 24 கண்டியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்.

நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்குள் முழு உலகமும் கொவிட்-19 தொற்றினால் முடங்கியது. அதேபோன்று தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுக்க வேண்டியேற்பட்டது.

மேலும் அரசாங்கம் என்ற வகையில் நாம் மேற்கொண்ட சில தீர்மானங்கள் காரணமாக  மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்கள்.

நான் விவசாய துறை அமைச்சர் என்ற வகையில் இராசயன உரம் தொடர்பில் எடுத்த முடிவுகள்  மற்றும் அரசாங்கத்தினால் 500 பில்லியனுக்கும் அதிகமான தீர்வை தொடர்பான வரிச்சலுகைகள் காரணமாக  நாம் நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டோம்.

இன்று காணப்படும் எரிபொருள் விலை, மின்சாரக்கட்டணம், எரிவாயு, மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்  6 மாதங்களுக்கு முன்னர் அதிகரித்து காணப்படவில்லை.

காரணம் நாட்டு மக்களின் இன்னல்களையும் அவர்களின் வாழ்க்கைச் செலவினையும் அவர்கள் மீது சுமத்தி விடாது அரசாங்கம் அதனை ஏற்றுக்கொண்டமையாகும்..

இந்நிலையில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது யாருக்கும் குற்றம் சுமத்த முடியாது. நாட்டின் அபிவிருத்திக்கு பாரியளவில் வேலைத்திட்டங்களை முன்னேடுத்திருக்கிறது.

நாட்டு மக்களுக்கு நினைவிருக்கலாம் 2015 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சி நாட்டு மக்களுக்கு ஒன்றும் பெரிதளவில் செய்யவில்லை.ஆனால் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்குபெருந்தெருக்களை அமைத்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

இந்நிலையில் பொதுஜன பெரமுன  பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும்  மக்களுக்கு சேவை செய்த  பெரும் தலைவர்களை உருவாக்கிய பலம் பொருந்திய அரசியல் கட்சியாகும்.30 வருட கால யுத்தம் மற்றும்  கொவிட் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஆட்சியாளர்களை கொண்டமைந்த அரசியல் கட்சி.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொண்டு மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மீண்டும் எமது அரசாங்கத்தை உருவாக்குவோம் என்றார்.