பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது.
ரஷ்யாவைக் கைவிடவும் முடியாமல், அமெரிக்காவின் பக்கம் முழுமையாகச் செல்லவும் முடியாத இக்கட்டான நிலை இலங்கைக்கு உள்ளது.
இந்த இரட்டை நிலையால் இலங்கை இன்னமும் பல்வேறு குழப்பங்களை எதிர்கொண்டு வருக்கிறது.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் உடனடியான நெருக்கடியில் வீழ்ந்தமைக்கு, சுற்றுலாத்துறை வருமானம் வீழ்ச்சியடைந்ததும் ஒரு காரணம்.
கொரோனா நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத் துறையை ரஷ்யா,உக்ரேன் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம், மீளக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்த போது தான், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்தது.
அத்துடன் ரஷ்யா மீது சர்வதேச தடைகள் விதிக்கப்பட, உக்ரைனில் போர் நெருக்கடி ஏற்பட இரண்டு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தடைப்பட்டது.
ரஷ்யாவில் இருந்து குறைந்தளவு சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்யாவின் ‘ஏரோ புளொட்’ விமானம் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, அந்த நிறுவனம் சேவையை நிறுத்திக் கொண்டது.
இதனால், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை மிக மோசமாக குறைந்து போனது. இது நாட்டில் பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டுவதில் முக்கிய காரணியாக இருந்தது.
தற்போது, பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கும் அரசாங்கம், அதற்காக ரஷ்யாவுடன் தொடர்புகளை வலுப்படுத்தவும் தயாராக உள்ளது.
சர்வதேச தடைகளால் ரஷ்யாவினால் எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. அதேவேளை, இலங்கையினால், எண்ணெய், எரிவாயு போன்றவற்றுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலை நீடிக்கிறது.
இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு எண்ணெய், எரிவாயு போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது.
அத்துடன், மீண்டும் ரஷ்யாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கொண்டு வருவதற்கும் ரஷ்யாவிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருக்கிறது.
ஏரோ புளொட் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதற்கு ரஷ்யாவிடம் மன்னிப்புக் கோரியுள்ள அரசாங்கம், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாது எனவும் உறுதி கூறியிருக்கிறது.
அதேவேளை ரஷ்யாவின் மிகப்பெரிய வாடகை விமான சேவை நிறுவனமான, அசுர் எயர், வரும் டிசெம்பரில் இருந்து சேவையை ஆரம்பிக்க இணங்கியிருக்கிறது.
இதன் மூலம், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு கொண்டு வர முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது.
இலங்கையின் மீது கொண்ட பற்றுதலால் அல்லது, இலங்கைக்கு உதவுகின்ற நோக்கத்துடன் மாத்திரம் ரஷ்யா இதற்கு இணங்கவில்லை. தன் மீதான தடைகளை உடைப்பதற்கும், அமெரிக்காவுக்கு மாற்றான, பொருளாதார ஒழுங்கு ஒன்றை வடிவமைக்கும் முயற்சிக்கும் இலங்கையைப் பயன்படுத்திக் கொள்ள ரஷ்யா முற்படுகிறது.
வர்த்தகம் என்பது எப்போதும் இருபக்க நலன் சார்ந்த ஒன்று. அதில் அனுதாபத்துக்கு இடமில்லை. சீனாவைப் போலவே ரஷ்யாவும் அதில் தெளிவாக இருக்கிறது.
உக் ரேன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து, ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விதித்திருக்கின்றன.
மேற்குலகின் எதிர்நடவடிக்கைக்கள், ரஷ்யாவை கடுமையாகப் பாதித்திருக்கிறது. உக் ரேன் போருக்கு மேற்குலகம் வழங்கும் உதவிகளும், ரஷ்யாவை முடக்குவதற்கு எடுக்கின்ற நடவடிக்கைகளும் ரஷ்யாவுக்கு மோசமான பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில், மேற்குலகத்தின் மீதான கடும் வெறுப்பை கொட்டித் தீர்த்திருந்தார்.
மேற்குலகின் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள நிலைப்படுத்துவதற்காக, அமெரிக்காவை மையப்படுத்திய- டொலரை அடிப்படையாக கொண்ட வங்கி அட்டைப் பரிமாற்ற முறைக்கு மாற்றாக, ரஷ்யா தனது மிர் வங்கி அட்டைகள் மற்றும் பரிமாற்ற முறையை ஏற்றுக் கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
அண்மையில் ரஷ்யாவுக்குச் சென்று திரும்பிய அமைச்சர் பந்துல குணவர்த்தன, சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பில் ரஷ்யாவின் மிர் வங்கி அட்டை முறையை ஏற்றுக் கொள்ளுமாறு, ரஷ்யா கோரியிருப்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.
ரஷ்யாவின் மிர் வங்கி அட்டை முறையை பல நாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும், அதனை இலங்கை அங்கீகரிப்பதன் மூலம், பல்வேறு பொருளாதார நலன்களை பெறமுடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இலங்கைக்கான ரஷ்ய விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான ஒரு முன் நிபந்தனையாக மிர் அட்டையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிகிறது.
இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம், எடுக்கப் போகும் முடிவு தான் அது சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளுமா என்பதை தீர்மானிக்கும்.
ரஷ்யாவின் மிர் வங்கி அட்டையை ஏற்றுக் கொண்டால் அது மேற்குலகின், குறிப்பாக அமெரிக்காவின் கோபத்துக்கு உள்ளாகும் நிலையை ஏற்படுத்தும்.
ரஷ்யாவின் மிர் பணம் செலுத்தும் வலையமைப்புடன், ஒப்பந்தங்களில் ஈடுபடும் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள வங்கிகள் அமெரிக்க தடைகளைத் தவிர்ப்பதற்கான ரஷ்யாவின் முயற்சிகளை ஆதரிப்பதாக கொள்ளப்படும் ஆபத்து உள்ளதாக, அமெரிக்க திறைசேரி திணைக்களம் அண்மையில் எச்சரித்திருக்கிறது.
இதையடுத்து, ரஷ்ய மத்திய வங்கியின் மிர் கொடுப்பனவு முறையை ஏற்றுக்கொண்டிருந்த துருக்கியேவின், இஸ் வங்கி மற்றும் டெனிஸ் வங்கி ஆகியன, அதிலிருந்து விலகிக் கொள்வதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளன.
அமெரிக்க தடையை எதிர்கொள்ளலாம் என்பதாலேயே துருக்கிய வங்கிகள் பின்வாங்கியிருக்கின்றன. அமெரிக்காவின் வீசா மற்றும் மாஸ்டர் அட்டை நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களின் சேவைகளை நிறுத்தியிருக்கின்றன. இதனால் ரஷ்யாவுக்கு வெளியே செல்பவர்கள், நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள்.
ரஷ்யர்கள் அதிகம் பயணம் செய்யும் நாடுகளில் துருக்கியும் ஒன்று என்பதால், அந்த நாட்டின் ஐந்து வங்கிகள் மிர் அட்டைகளை ஏற்றுக் கொண்டிருந்தன.
அதுபோலத் தான் இலங்கையையும் ஏற்றுக் கொள்ள வைக்க ரஷ்யா முயற்சிக்கிறது.
உலகின் பல நாடுகள் மிர் அட்டைகளை ஏற்றுக் கொண்டிருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியிருக்கிறார்.
ஆனால், அதனை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்த நாடுகளின் எண்ணிக்கை 11 மட்டும் தான்.
அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து. அவற்றில் நான்கு நாடுகளான ஆர்மேனியா, கசகஸ்தான், துருக்கி, வியட்நாம் என்பன, செப்ரெம்பர் 20ஆம் திகதியுடன் மிர் அட்டை கொடுப்பனவு முறையை இடைநிறுத்தியிருக்கின்றன.
இதனால் தற்போது மிர் அட்டை பாவனையில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 7 ஆக சுருங்கியிருக்கிறது. பெலாரஸ், எகிப்து, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசுவேலா, கியூபா ஆகியனவே அவை.
இவற்றில், நான்கு நாடுகள், முன்னாள் சோவியத் ஒன்றியத்தை சேர்ந்தவை. வெனிசுவேலா, கியூபா என்பன ரஷ்யாவின் பாரம்பரிய கூட்டாளிகள்.
அதேவேளை, மிர் அட்டையை ஏற்றுக் கொள்வது குறித்து, ரஷ்யாவுடன் பேச்சு நடத்தி வருகிறது மியான்மாரின் இராணுவ அரசாங்கம்.
இந்த நாடுகளுடன் இலங்கை இணைந்து கொள்வது பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்காது.
ஆனாலும், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாயின், அவர்கள் இலங்கையில் தங்களின் நாட்டுப் பணத்தை செலவிடுவதற்கு, வழியொன்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் சட்டரீதியாக ரஷ்யா அமெரிக்க டொலரைப் பயன்படுத்துவதற்கு, அமெரிக்கா தடைவிதித்துள்ளது. ரஷ்யாவிலும் டொலர் நெருக்கடி காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள், அமெரிக்க டொலரைப் பெற்றுக் கொண்டு வந்து, இலங்கையில் செலவழிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
எனவே மாற்று வழியொன்றை இலங்கை அறிமுகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் மிர் அட்டையை அறிமுகம் செய்வது சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகப்படுத்தினாலும், அது இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு பிரச்சினையை தீர்க்க உதவாது.
ஏனென்றால் இலங்கைக்கு தேவைப்படுவது டொலர் தான். ரஷ்யாவுடனான கொள்வனவு, கொடுப்பனவுகளுக்கு மட்டும் தான் மிர் முறையை பயன்படுத்த முடியும். இவ்வாறான நிலையில் மிர் அட்டை விவகாரத்தில் இலங்கை அவசரப்பட்டால், மேற்குலகின் உதவிகளையும், ஆதரவையும் இழக்கும் நிலை ஏற்படலாம்.
ஹரிகரன்