தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்கும் இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. அதற்கு ஏதுவாக தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கவும், தொழில்களை விரிவாக்கம் செய்யவும் தேவைப்படும் நடைமுறைகளை அரசு எளிமைப்படுத்தி வருகிறது.
மேலும், தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க அரசு அழைப்பு விடுத்து வருகிறது. இந்தநிலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் குழு, ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இந்த குழு சென்னையில் இருந்து ஒருவார பயணமாக அந்த நாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளில் முறையே டோக்கியோ மற்றும் சியோல் ஆகிய நகரங்களுக்கு செல்ல இருக்கிறோம். காலணி தொழில்களில் முதலீடுகளை ஈர்க்க முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
தமிழகத்தில் ஏற்கனவே தொழில் தொடங்கி இருக்கும் அங்குள்ள ஹூண்டாய், சாம்சங், கோபெல்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளையும் சந்தித்து பேச இருக்கிறோம். காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டார்.
அதன் மூலம் தமிழகத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கவும், 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.