காலிமுகத்திடலில் மேலெழுந்த அரசியல் புரட்சியின் காரணமாக, ராஜபக்ஷக்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டிருந்தாலும் கூட, அந்த மக்கள் புரட்சிக்கான இலக்குகள் இன்னமும் அடையப்பட்டவையாக இல்லை.
தற்போது, பேரலையாக உயர்ந்த மக்கள் அலை சற்றே தணிந்திருக்கின்றது. அதேநேரம் தணிக்கவும் பட்டிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றிருக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க. பிரதமர் பதவியை ஏற்றிருக்கின்றார் தினேஷ் குணவர்த்தன.
இந்த இரண்டு நபர்களையும் கட்சி அரசியலுக்கு அப்பால் நோக்குகின்றனபோது, ‘கறைபடியாத’ கரங்களைக் கொண்டவர்கள் என்று கூறுவதில் தவறில்லை. ஆனால் அவர்கள் மீது, ஊழல்மோசடிகளுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாது பாதுகாக்கின்றார்கள் என்ற வலுவான விமர்சனங்களும் உள்ளன.
அந்த விமர்சனங்கள், ஒருபுறமிருந்தாலும், நாட்டில் நிறைவேற்று அதிகாரஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவும், பிரதமர் தினேஷ்குணவர்த்தனவும் அரசியலில் அரைநூற்றாண்டுக்கு அதிகமான அனுபவங்களைக் கொண்டவர்களாக உள்ளனர்.
தற்போதைய நிலையில், வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அவர்களால் பொருளாதார நெருக்கடிகளுக்கும் நிரந்தரமான தீர்வுகளை காண்பதற்கான கதவுகளை நிச்சயமாக திறப்பாகர்கள் என்ற பலமான நம்பிக்கை காணப்படுகின்றது.
இவற்றுக்கு அப்பால் இந்த நபர்களிடத்தில் அரசியல் கலாசார மாற்றத்துக்கான பெரும் வகிபாகம் இருக்கின்றது என்பது தான் முக்கிய விடயமாகின்றது.
அதாவது, அரசியல்காலாசார மாற்றம் என்ற விடயம் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கின்றது.
இந்த அரசியல்கலாசாரத்தினை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றிய கேள்விகளுக்கு விஞ்ஞானரீதியில் வானளவிற்கு சிந்தனைகளைச் செய்ய வேண்டியதில்லை.
அரசியலில் காணப்படுகின்ற மிக முக்கியமான அடிப்படைகளை மாற்றியமைப்பதன் ஊடாக, மாற்றங்களை ஏற்படுத்தலாம். புதிய அரசியல் கலாசாரத்துடனான மாற்றத்தினை நிறுவலாம்.
அந்தவகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பிரதமர் தினேஷ்குணவர்த்தனவும், இந்த மாற்றம் தொடர்பில் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது விநயமான கோரிக்கையாக உள்ளது.
முதலாவதாக, ஜனாதிபதி ரணிலும், பிரதமர் தினேஷ{ம் தற்போது பாராளுமன்றத்தினை பிரதிநித்;துவப்படுத்தும் 225உறுப்பினர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் அவர்களில் சிலருடன் சமவயதினராகவும், பலருடன் அதிசிரேஷ்டத்துவமானவர்களாகவும் உள்ளார்கள்.
அந்தஅடிப்படையில், தமக்கு அரசியலில் கனிஷ்டர்களாக இருப்பவர்கள் எவ்வாறு அரசியலுக்கு வந்தார்கள், அவர்கள் வரும்போது அவர்களின் வருமானங்கள் என்ன? அவர்களிடத்தில் காணப்பட்ட சொத்துக்கள் என்ன? வியாபாரங்கள் என்ன? என்பது பற்றி நன்றாகவே அறிந்திருப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
ஆகவே, அவர்கள் அரசியலுக்கு வந்ததன் பின்னர் எவ்விதமான மாற்றங்களைக் கண்டுள்ளார்கள் என்பதையும் ஜனாதிபதியும், பிரதமரும் உணராமலில்லை. ஆகவே, பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மட்டமன்றி சாதாரணமாக கட்சிய அரசியல்ல ஈடுபட்டுக்கொண்டிருக்கும், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், முதல் அனைத்து அரசியல் பிரமுகர்களும் தமது சொத்துவிபரங்களை வெளிப்படைத்தன்மையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
தேர்தல்கள் திணைக்களத்தில் இதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் காணப்பட்டாலும், சொத்துவிபரங்களை பகிரங்கப்படுத்தாது விடுவதொன்றும் குற்றமாகிவிடாது என்றும் அதனை கேள்விக்குட்படுத்த முடியாத நிலையிலும் தான் உள்ளது.
ஆகவே, அந்த நிலைமைகளை மாற்றியமைத்து, அரசியலில் பிரவேசிக்கின்ற ஒருவரோ அல்லது அரசியலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒருவரே, அமைச்சுப்பதவிகளைக் கொண்டிருப்பவர்களோ எவராக இருந்தாலும் சரி தமது சொத்து விபரங்களையும், அதற்கான மூலங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதை சட்ட ஏற்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
ஏனெனில், அடுத்து தேர்தல்களை நோக்கிய காலம் ஆரம்மாகப்போகின்றது. பொதுமக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அரசியல்வாதிகள் மீது கடுமையான அதிருப்தியைக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்களிடத்தில் ஆணை கேட்கச் செல்லும் முன்னதாக இவ்விதமான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டால் பொதுமக்கள் தமக்கான சரியான, நேர்மையான பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் தவறிழைக்க மாட்டார்கள்.
அவ்விதமான நிலைமையொன்று உருவாகின்றபோது. தனது சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற, அர்ப்பணிப்புள்ள, ஊழல்மோசடி பேர்வழிகள் இல்லாதவர்கள் பிரதிநிதிகளாக தெரிவாகுவதற்கே அதிகளவு சாத்தியங்கள் உள்ளன. அவ்வாறான நிலைமையொன்று உருவாகின்றபோது, இலங்கையில் கறைபடிந்துள்ள அரசியலுக்கு புத்துணர்ச்சியுடன் புதிய இரத்தம் பாய்ச்சப்படும்.
மட்டுமன்றி, அவ்விதமான அரசியல் கலாசாரத்தினை உருவாக்கிய உலகின் அதியுயர்ந்த தலைவர்களாக ஜனாதிபதியும், பிரதமரும் உயர்ந்து நிற்பார்கள். உலகமே கொண்டாடும் பிரதான நபர்களாக இருப்பார்கள்.ஆகவே, இந்தக் கடினமான பணியை பாடசாலை சகாக்களான ஜனாதிபதியும், பிரதமரும் கூட்டிணைந்து முன்னெடுக்க வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக, இருக்கும் விடயம் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகள் வெளிப்படுத்தப்படாமையாகும். இதில், தேசிய கட்சிகள் முதல் சிறுபான்மை தேசிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் வரையில் ஒரேவகையறாக்களாகவே உள்ளன.
இந்தநிலைமைகளும் மாற்றியமைக்கப்படுவது மிகவும் அவசியமானதொன்றாக இருக்கின்றன. ஆதிகமான அரசியல்கட்சிகள் ஜனநாயகத்திற்கு அழகு என்று வாதிடலாம். ஆனால், அந்த ஜனநாயகம் அழகாக இருக்க வேண்டுமாக இருந்தால் அரசியல் கட்சிகள் கட்டமைப்புக்களையும், வெளிப்படைத்தன்மைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும். அந்தவகையில், அரசியல்கட்சிகளின் நிதிக்கையாளுகை வெளிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. மக்கள் ஆணைபெறுவதற்காக களம் செல்லும் எந்தவொரு கட்சிக்கும் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியது தார்மீக கடமையாகும்.
அந்தவகையில், ஜனாதிபதியும், பிரதமரும் தனித்தனியே கட்சிகளை வழிநடாத்துபவர்களாக இருக்கின்ற நிலையில் இவ்விடயத்தினை பொருட்டாக கொண்டு தமது கட்சிகளிலிருந்து அச்செயற்பாட்டை ஆரம்பித்தல் பொருத்தமானதாக இருக்கும்.
அடுத்து ஊழல்மோசடிகள் பற்றிய விடயம். மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்ளும் அரசியல் தரப்பினர் அதிகாரபீடத்தில் அமர்ந்துகொண்ட இந்தச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இல்லாது விட்டால் ஊழல்மோசடிகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கின்றார்கள். இந்த விடயத்தில் பாரபட்சமற்றவகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
கட்சி நலன், தனிப்பட்ட நலன் என்று எந்தவொரு அரசியல் கட்சிகளும் சிந்திக்காது கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது காலத்தின் தேவையாகிவிட்டது.
நடைபெற்றுக்கொண்டிருக்கும், 51ஆவது மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருடைய அறிக்கையில் மிகத்தெளிவாக இம்முறை புதிய விடயமொன்று இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது, இலங்கையில் பொருளாதாரக் குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதனால் தான் நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளது. ஆகவே பொருளாதார குற்றங்களை இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு, அவர்களால் சூறையாடப்பட்டவற்றை மீளவும் நாட்டுக்குத் திருப்புவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதோடு அதற்கான சில பரிந்துரைகளையும் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், பொருளாதார விடயங்களில் முன்னேற்றங்களை காண்பதாக இருந்தால் சர்வதேச நாடுகளின் உதவிகள் மிகமிக அவசியமாகின்றன. அந்த உதவிகளைப்பெற்றுக்கொள்வதற்கு முதலில் பொருளாதார குற்றங்கள் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பொறுப்புக்கூறப்பட வேண்டும்.
அதன்மூலம் ஏற்படுத்தப்படும் நம்பிக்கையின் அடிப்படையில் சர்வதேசத்துடன் புதிய உறவுகள் வலுப்பெறும். நாடு சுபீட்சத்தை நோக்கிய பயணத்தினை ஆரம்பிக்கும். ஆக, வெளிப்படைத் தன்மை தான் இந்த நாட்டின் விடிவுகாலத்திற்கான திறவுகோல்.
ரஹ்மத் மன்சூர்
பிரதிமேயர்,கல்முனை