பௌத்த விகாரைகள் உட்பட பதிவு செய்யப்பட்ட ஏனைய மதத் தலங்களில் 180 அலகிற்கும் அதிக மின் பாவனையைக் கொண்டவையே அதிக மின்கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது.
இவ்வாறு அதிக மின்சார தேவை கொண்ட மத வழிபாட்டு தளங்களில் சூரிய மின்உற்பத்தி தொகுதியைப் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத வழிபாட்டுத் தலங்களில் மின்கட்டண நெருக்கடி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து மகாசங்கத்தினருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
‘அண்மைக் காலமாக நாட்டில் படிப்படியாக வளர்ச்சியடைந்த பொருளாதார நெருக்கடியின் நேரடி விளைவாகவே மின்சார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியிலிருந்து பொது மக்கள் மற்றும் அனைத்து மத சமூகமும் மீளக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது எமது பொறுப்பாகும்.
பௌத்த விகாரைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஏனைய மத மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் 42 950 பிரதான மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இவற்றுக்காக 91 மில்லியன் மின் அலகுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய மின் கட்டண முறைமையின் கீழ் சாதாரண மின் அலகொன்றுக்கு 7 ரூபாய் 17 சதம் அறவிடப்படுகிறது. இதே வேளை சகல மதத் தலங்களுக்கும் மின் அலகொன்றுக்கு 11 ரூபா 46 சதம் அறவிடப்படுகிறது.
தற்போது பௌத்த விகாரைகள் மற்றும் ஏனைய பதிவு செய்யப்பட்ட மத மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் 15 527 இல் மாதத்திற்கு 30 அலகுகளுக்கும் குறைவாகவே மின் பாவனை காணப்படுகிறது.
இதே போன்று 9441 மத தலங்கள் உள்ளிட்டவை 31 – 90 க்கு இடைப்பட்ட மின் அலகுகளையும் , மேலும் 3274 மத தலங்கள் உள்ளிட்டவை 91 – 120 அலகுகளையும் , மேலும் 4972 மத தலங்கள் உள்ளிட்டவை 121 – 180 மின் அலகுகளையும் பயன்படுத்துகின்றன.
பௌத்த விகாரைகள் மற்றும் ஏனைய பதிவு செய்யப்பட்ட மத மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் 33 214 இல் புதிய மின் கட்டண திருத்தத்திற்கமைய மாதாந்தம் செலுத்தப்பட வேண்டியுள்ள அதிகூடிய மின் கட்டணம் 4000 ரூபாவாகும்.
இதனை விட அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளமை 180 மின் அலகுகளை விட அதிக மின்சாரத்தை பாவிக்கும் 9800 மத வழிபாட்டு தளங்களுக்கு மாத்திரமேயாகும்.
அதன்படி, 180 அலகிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் விகாரைகள் அல்லது பிற மத வழிபாட்டுத் தலங்கள் என்றும், 180 அலகிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவை என்றும் இரண்டு வகையாகக் கண்டறியலாம்.
புதிய மின்கட்டண திருத்தத்தால், 180 அலகிற்கு மேல் அதிக மின்சாரம் பயன்படுத்தும் இடங்கள் பாதிக்கப்படுவது உண்மைதான்.
எனவே அதிகளவான மின்சாரத்தை பாவிக்கும் மதத் தலங்களில் எவ்வாறு மின்சாரத்தை முகாமைத்துவம் செய்வது என்பதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் , அதிக மின்சார தேவை காணப்படுகின்ற வழிபாட்டு தளங்களில் சூரிய மின் உற்பத்தி களங்களைப் பொறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.