இரண்டாம் எலிசபேத் மகாராணி தலைமையிலான பிரித்தானியா எமது மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றபோது அவர்களை அரவணைத்து சம உரிமை வழங்கி இருந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலனாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) இடம்பெற்ற காலஞ்சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இரண்டாம் எலிசபெத் மகாராணி தலைமையிலான பிரித்தானியா ஜனநாயகம் கொண்ட நாடாக இருந்தது. குறிப்பாக யுத்தம் காரணமாக எமது நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து அங்கு சென்ற மக்களை அரவணைத்து, அந்த நாட்டு மக்களுக்கு இருக்கும் சம உரிமையை வழங்கக்கூடிய ஒரு நிலையை பிரித்தானியாவில் காணக்கூடியதாக இருந்தது.
அதேபாேன்று எமது மக்கள் அந்தநாட்டில் இருந்து உரிமைப்போராட்டங்களை மேற்கொள்ளும்போதெல்லாம் அவர்களை அடக்கு முறைக்கு உள்ளாக்கும் நிலை அங்கு இருக்கவில்லை. ஜனநாயக மரபுகள் அந்த நாட்டிலே மேலோங்கி இருப்பதே இதற்கு காரணமாகும்.
இவ்வாறான நிலையில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு அந்த நாட்டு மக்கள் மாத்திரமல்ல, எமது நாட்டு உறவுகளுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இவ்வாறான ஜனநாயக மரபுகளை மதித்து செயற்படுகின்ற ஒரு தலைவரையே நாங்கள் இழந்திருக்கின்றோம். எனவே மகாராணியின் மறைவு தொடர்பில் எமது மக்கள் சார்பாகவும் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்ப்பாகவும் அனுதாபத்தை தெரிவிக்கின்றோம் என்றார்.