இலங்கையில் இந்திய இராணுவத்தின் முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் – மீனாக்ஷி கங்குலி

115 0

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பொறிமுறைகள் மூலம் இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்தியபோது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.

மோதலின்போது இடம்பெற்ற சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்து சர்வதேச குற்றங்களுக்கும் தீர்வு காண இலங்கை மீது வலுவான தீர்மானத்தை கோருவதாக மீனாக்ஷி கங்குலி தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்திய படையினர் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்காக அனுப்பப்பட்டிருந்தபோது இடம்பெற்ற முறைகேடுகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பொறுப்புக்கூறல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.