பொறுமை, அர்ப்பணிப்புமிக்க வாழ்க்கையை கடைப்பிடித்த எலிசபெத் மகாராணி உலகின் அனைத்து மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி கரம் கோர்த்து செயற்பட்டார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவியாக செயற்பட்டு சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்த அவர் எப்போதும் சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவமளித்து வாழ்ந்தவர் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமரத்துவமடைந்த எலிசபெத் மகாராணிக்கான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உலகில் எத்தகைய சமூக அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட போதும் தமது நாட்டின் சம்பிரதாயங்களை தொடர்ந்தும் சிறப்பாக கடைப்பிடித்தவர் எலிசபெத் மகாராணி.
தமது நாட்டை மட்டுமன்றி ஏனைய நாடுகளின் மக்களின் மீது கவனம் செலுத்தி வாழ்ந்ததுடன் இறுதி வரை உலகத்தவருடன் அவரது கரங்களை பிணைத்துக் கொண்டு பயணித்தவர் அவர்.
பொறுமை மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவர் நாட்டுக்காக தனிப்பட்ட ஆசாபாசங்களை கைவிட வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர்.
சம்பிரதாயங்களை பாதுகாப்பது அரச குலத்தின் சம்பிரதாயம். அதனை அவர் பாதுகாத்தார். அவரது அர்ப்பணிப்புமிக்க செயற்பாடுகள் எதிர்கால மன்னர்களுக்கும் சிறந்த முன்மாதிரியானவை.
உலக மாற்றங்களுக்கு மத்தியிலும் தமது சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து செயற்பட்டவர். அதனால் பிரிட்டன் எப்போதும் தலைநிமிர்ந்து முன் செல்ல முடிந்தது. பிரித்தானிய அரசர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்ற அடிப்படைக்கு அமைய தமது வாழ்க்கையை கடைப்பிடித்தார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவியாக அவர் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. இரண்டு தடவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
நாட்டின் பல முக்கியமான இடங்களுக்கு பயணம் செய்தார். அதன் போது அவரது செயற்பாடுகள் மிகவும் கௌரவமானதாக அமைந்தது. நாட்டைப் போன்று நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என்பதில் அவர் முன்மாதிரியாக செயற்பட்டார்.