இந்தியாவிலேயே இறக்க விரும்புகிறேன்: தலாய் லாமா

121 0

சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவிலேயே இறக்க விரும்புவதாகவும், சீனாவில் இறக்க விரும்பவில்லை என்றும் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

திபெத்தின் புத்தமத தலைவரான தலாய் லாமா, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இருந்து கடந்த 1959-ம் ஆண்டு தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரோடு, அவரது சீடர்களும், அரசு அதிகாரிகளும் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அவர்கள், ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், தலாய் லாமாவை அமெரிக்காவின் இளம் தலைவர்கள் சந்தித்து உரையாடினர். அப்போது பேசிய தலாய் லாமா, தனது மரணம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதை நினைவுகூர்ந்து விவரித்தார்.

“அடுத்த 15 – 20 ஆண்டுகள் நான் உயிரோடு இருப்பேன். அதில் கேள்விக்கு இடமில்லை. இறக்கும் நேரம் வரும்போது, நான் இந்தியாவையே தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், இந்தியர்கள் அன்பு மிக்கவர்கள். அவர்களிடம் செயற்கைத்தனம் ஏதும் இல்லை. எனவே, அவர்கள் மத்தியிலேயே இறக்க விரும்புகிறேன். மாறாக, செயற்கைத்தனம் நிறைந்த சீன அதிகாரிகள் மத்தியில் இறக்க விரும்பவில்லை. சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவில் மரணம் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்” இவ்வாறு மன்மோகன் சிங்கிடம் கூறினேன் என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஃபேஸ்புக்கில் தலாய் லாமா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உண்மையாகவே வருந்தக்கூடிய நம்பிக்கையான நண்பர்கள் மத்தியில்தான் ஒருவர் உயிரிழக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.