சிங்கள இனவாதிகளின் பட்டியலில் வீரசேகரா தன்னையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறாரா இனவாதத்தையே பேசி இலங்கையின் வளர்ச்சியை முறியடிக்கிறாரா ? என இலங்கை சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் இராவணன் என்ற மன்னனும் இல்லை சிவ வழிபாடும் கிடையாது என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் நேற்று (22) உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.
குறித்த கருத்துக்கு பதில் வழங்கி இலங்கை சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தனால் இன்று (23) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரசேகர வரலாற்று அறிஞர் அல்லர், படைவீரர், அரசியல்வாதி, அமைச்சர் என்ற முகங்கள் வீரசேகராவுக்கு வரலாற்று ஆய்வாளர் என்ற முகம் அவருக்கு இல்லை.
இராமாயணம் காப்பியம் தெற்கு ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் இராமாயணக் காப்பிய நாயகர் சிலைகளாகச் சிற்பங்களாகக் கலைகளாக நடனங்களாக நாட்டியங்களாக இசையாக ஓவியங்களாகப் பரந்து கிடக்கின்றன.
இராவணன் காப்பிய நாயகன். அவன் இலங்கைக்குரியவன், இலங்கையில் வாழ்ந்தான் என்பதை இலங்கை அரசு ஏற்றது.
பூமியைச் சுற்ற இலங்கை அனுப்பிய செயற்கைக்கோளுக்கு இராவணனின் பெயர்.
தம் முன்னோர் இராவணன் வழிவந்தவர் என்பதை ஏற்ற சிங்கள மக்கள், தாம் அமைத்து நடத்தும் இயக்கத்தை இராவண சேனை என்பர்.
சிவ வழிபாட்டுக்கும், இராவணனுக்கும் உள்ள தொடர்பு இராமாயணக் காப்பியம் முழுவதும் பரந்து கிடக்கிறது.
வால்மீகியாலும் கம்பராலும் ஏனைய மொழிகளில் எழுதியவர்களாலும் இராவணனின் சிவ பக்தியை விசுவாசத்தை நம்பிக்கையை வழிபாட்டு உணர்வை கயிலையைப் பெயர்க்கும் செய்தியை – காந்தாரம் தொடக்கம் வியத்நாம் வரையான அனைத்து நாடுகளிலும் எழுதி வைத்திருக்கிறார்கள், சிலைகளாக வடித்து வைத்திருக்கிறார்கள்.
இராவணனுக்கும், சிவபெருமானுக்கும், இலங்கைக்கும் உள்ள தொடர்பு வரலாற்றுள் புதைந்தது. காப்பியத்துள் மலர்ந்தது. சைவ உலகமும் இந்து உலகமும் ஏற்றுக் கொண்டதே. அயோத்திக்கு இராமன். திருகோணமலைக்கு இராவணன் இதில் எவருக்கும் ஈடாட்டம் இல்லை.
வீரசேகராவுக்கு இவை தெரியாவிட்டால் அவர் வரலாற்றைப் படிக்க வேண்டும் காப்பியங்களைப் படிக்க வேண்டும். மகா வம்சத்தில் திருகோணமலையில் மூன்று புத்த விகாரங்கள் இருந்ததால் மூன்று கோணங்கள் கொண்ட திரி கோணம் என மகா வம்சம் சொல்வதாக வீரசேகரா சொல்கிறார்.
நான் மகா வம்சத்தை முழுமையாகப் படித்துள்ளேன். மகாநாமர் எழுதியதான மன்னன் மகாசேனன் வரையான 37 படலங்களையும் ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன்.
வீரசேகரா சொல்லும் வரிகள் என் கண்ணில் படவில்லை. திருகோணமலை தொடர்பாக மகாவம்சத்தில் இருப்பதாக வீரசேகரா கூறியதை சான்றுகளுடன் சொல்ல வேண்டும். எழுந்தமானமாக சொல்லலாமா?
வீரசேகரா காப்பியங்களைப் படிப்பாராக. வரலாற்றைப் படிப்பாராக. இலங்கையின் மாபெரும் மன்னனும் சிவபெருமானின் அடியவனுமான இராவணனுக்கு இலங்கை அரசு கொடுத்த மரியாதையைத் தெரிந்து கொள்வாராக. சிங்கள மக்கள் தம் தமிழ்ச் சைவ முன்னோரை மதிக்க இராவண சேனை அமைத்திருப்பதைத் தெரிந்து கொள்வாராக.
இலங்கையில் உள்ள ஒவ்வொரு புத்த விகாரையிலும் இராவணன் வழிபட்ட சிவலிங்கத்தை நிறுவிப் புத்தர்கள் வழிபடுவதைத் தெரிந்து கொள்வாராக.
பரணவிதான, மேத்தானந்தா, கே எம் பி ராசரத்தினா என நீளும் சிங்கள இனவாதிகளின் பட்டியலில் வீரசேகரா தன்னையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறாரா இனவாதத்தையே பேசி இலங்கையின் வளர்ச்சியை முறியடிக்கிறாரா? இலங்கை மக்களை வீழ்ச்சி நோக்கிக் கொண்டு செல்கிறாரா?