இலங்கை மின்சாரசபையினால் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து , மத வழிபாட்டு தளங்கள் மின் கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளமை தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டது.
அதற்கமை சகல மத வழிபாட்டு தளங்களுக்கும் மின் கட்டணத்தை செலுத்துவதற்கான நீண்ட கால நிவாரண திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வெள்ளிக்கிழமை (23) நடைபெற்றது.
இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,
மத வழிபாட்டு தலங்களுக்கு அதிகளவான மின்சாரக் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக மதத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தினார். நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ , பிரதமர் தினேஷ்குணவர்தன உள்ளிட்ட ஏனைய அமைச்சர்களும் இது தொடர்பில் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினர்.
அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அனைத்து நிலைப்பாடுகளையும் கவனத்தில் கொண்டு , விகாரைகளுக்கு மாத்திரமின்றி ஏனைய அனைத்து மத வழிபாட்டு தளங்களுக்கும் மின்சார கட்டணத்தை வழங்குவதற்கான நீண்ட கால நிவாரண திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன் போது ஆலோசனை வழங்கினார்.
அதற்கமைய சகல மத வழிபாட்டு தளங்களிலும் சூரிய சக்தி மூலமான மின்உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
அதே போன்று வேறு வழிமுறையில் நிவாரணத்தை வழங்குவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார் என்றார்.