தியாக தீபம் திலீபனுக்கு உண்ணாநோன்பு இருந்து அஞ்சலியுங்கள்

139 0

தியாக தீபம் திலீபனுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாநோன்பு இருந்து எங்களுடைய வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் அனைத்து தமிழ் உறவுகளும் செய்ய வேண்டும் என தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்புக்கும் அரசியல் கட்சிகளுடைய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (23) நடைபெற்றது.

இதன் பின்னர் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர் கூட்டாக ஊடக சந்திப்பை நடாத்தி இந்த கோரிக்கையை விடுத்தனர்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தவத்திரு வேலன் சுவாமிகள், சுயாதீனமாக உருவாக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு சுயாதீனமாகவும் வெளிப்படுத்தன்மையோடும் இயங்கிவருகின்றது.

எங்களை யாரும் அணுகி தங்களுடைய ஆலோசனைகள் கருத்துக்களை முன்வைக்கலாம். இதனடிப்படையில் தமிழ் தேசிய பரப்பில் இருக்கின்ற கட்சிகளுடைய தலைவர்கள், பிரதிநிதிகள் உடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சில தீர்மானங்கள் எட்டப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை உண்ணாநோன்பு இருந்து எங்களுடைய வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் தியாக தீபம் திலீபனுக்கு அனைத்து தமிழ் உறவுகளும் செய்ய வேண்டும்.

தியாக தீபம் திலீபன் இன்னுயிரை ஈந்த இந்த நல்லூர் பூமியிலே அவருடைய நினைவாலயம் அமைந்திருக்கின்ற இடத்திலே உண்ணாவிரதம் நடைபெற இருக்கின்றது.

எந்த கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்தாரோ, பார்த்திபன் இன்னமும் பசியோடு தான் இருக்கின்றார் என்ற வாக்கியத்துக்கமைய இன்றும் அதே பிரச்சனைகளை ஒவ்வொரு வடிவங்களிலே எதிர்கொண்டிருக்கின்றோம்.

அவற்றுக்கான நிரந்தர தீர்வு வேண்டியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டியும் உண்ணா நோன்பை இருக்க தீர்மானித்திருக்கின்றோம்.

இந்த சந்தர்பப்த்தில் பெருமளவானோர் பங்குபற்ற வேண்டுமென்று இந்த சந்தர்ப்பத்தில் அறைகூவல் விடுக்கின்றோம்.மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற வாக்கியத்துக்கமைய மக்களுடைய புரட்சி எழுச்சியாக அமைய வேண்டும்.

தியாக தீபம் திலீபனுடைய நினைவு நாளான செப்டம்பர் 26ம் திகதி திங்கட்கிழமை தமிழர் தாயகத்தின் பல பாகங்களில் இருந்தும் ஊர்திகள் பவனிவர இருக்கின்றன.

அனைத்து ஊதிகளும் காலை 10 மணிக்கு முன்பதாக நல்லூர் தியாக தீபம் திலீபனுடைய நினைவாலயத்தை வந்தடையும். தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த 10.48 மணிக்கு மலரஞ்சலி இடம்பெறவிருக்கின்றது. இதன்போதும் மக்கள் பெரும் எழுச்சியாக வரவேண்டும். வாகன ஊர்திகள், தூக்குகாவடிகளை எங்கள் உறவுகள் காலையில் இருந்து அவற்றை கொண்டுவரலாம்.

தியாக தீபம் திலீபன் பிறந்த  ஊரெழுவிலிருந்து ஊர்தி நல்லூர் நினைவாலயத்தை நோக்கி வந்தடைய இருக்கின்றது. இந்த ஊர்திகளுடன் இணைந்து பயணித்துக் கொண்டு பொதுமக்கள் வரவேண்டும் என தியாக தீபம் திலீபனுடைய நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு சார்பில் இந்த அழைப்பை விடுகிறோம்.

தமிழ் தேசியப் பரப்பிலே இருக்கின்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் மாதர் சங்கங்கள், முச்சக்கர வண்டி சங்கங்கள், மீனவர் சங்கங்கள், விவசாய அமைப்புகள், பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், கிராம அபிவிருத்தி நிலையங்கள், விளையாட்டு கழகங்கள், இளைஞர் அமைப்புகள் என அனைத்து மக்களும் இவற்றை ஒழுங்கு செய்து ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதத்திலும் அதேபோல திங்கட்கிழமை நடைபெறும் நினைவேந்தல்களிலும் பங்குபற்றி மக்கள் எழுச்சியை காட்ட வேண்டும். அனைத்து அமைப்புகளையும் இதற்கு ஒழுங்கு செய்யுமாறு நாங்கள் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம், தமிழ் மக்களுடைய ஒட்டுமொத்தமான அபிலாசைகளை ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த பொதுக்கட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆகவே இந்த பொதுக்கட்டமைப்பின் நிகழ்ச்சிநிரலுக்கு பூரண ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டும் – என்றார்.