விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான 21 மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று(22.09.2022) நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி அன்று விமான படையினரின் புக்காரா விமானம் வீசிய குண்டு தாக்குதலில் நாகர்கோவில் மகாவித்தியத்தின் 21 மாணவர்கள் பலியாகினர். அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக, இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த சுந்தரலிங்கம் என்பவர் பொதுச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.
தொடர்ந்து நினைவுத் தூபிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலை மண்டபத்தில் 21 மாணவர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நாகர்கோவில் பாடசாலை அருகாமையில் இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் எம்.கே சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ் உட்பட்டவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதன்போது எம்.கே சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,“தமிழ் இனப்படுகொலையாளிகளை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் விடயத்தில் சர்வதேச நீதி கிடைக்க வேண்டும்.மீண்டும் இனப்படுகொலைகள் இடம்பெறாதிருக்கக்கூடிய பாதுகாப்பு பொறிமுறைகளை ஏற்படுத்துமாறும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை பாவித்து, தமிழ்தேசிய இனம் தமது சுய நிர்ணய உரிமையைப் பாவிக்கக் கூடியதாக இலங்கையின் வடக்கு – கிழக்கு மாநிலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைவரும் வாக்களிக்கக்கூடிய விதத்தில் சுதந்திரமா? சுயாட்சியா? என்ற பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்த முன்வருமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகர்கோவில் விமானக்குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களுக்குமான நீதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.