‘ ஸ்போர்ட்ஸ் சைன் ‘ எனும் மென் பொருளை உருவாக்கி, அதனுடன் தொடர்புபட்டவர்களிடம் கோடிக் கணக்கில் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் 7 பேரின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மென் பொருளுடன் தொடர்புடைய நிறுவனத்தின் பிரதானிகள் ஏழு பேரின் வெளிநாட்டு பயணங்களையே இவ்வாறு தடை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குணவல உத்தரவிட்டார்.
சி.ஐ.டி. அதிகாரிகள், நீதிமன்றில் முன் வைத்த விடயங்களை மையபப்டுத்தி இந்த 7 பேரின் வெலிநாட்டு பயணங்களை தடைச் செய்த நீதிவான், அவர்கலுடன் தொடர்புபட்ட 5 பிரதான வங்கிக் கணக்குகளையும் முடக்கி உத்தர்விட்டார்.
அஞ்சுள சம்பத் எனும் நபர் சி.ஐ.டி.யில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகளை சி.ஐ.டி.யினர் ஆராம்பித்ததாகவும், தற்போது வரை விசாரணைகளில் சுமார் 1500 கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பில் சி.ஐ.டி.க்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வரும் நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
முன்னதாக இதே விவகாரத்தை மையப்படுத்தி கொழும்பு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட மனுவொன்றிலும் 5 பேரின் வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.