ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பைடன் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு. இந்த கவுன்சிலில் நிரந்தர மற்றும் நிரந்தமில்லா உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற விருப்பத்தை அதிபர் பைடன் ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளார்.
மறுசீரமைக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இந்தியா நிரந்தர உறுப்பினர்களாவதற்கு அதிபர் பைடன் வரலாற்று ரீதியில் தொடர்ந்து ஆதரவளிப்பார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்றுமுன்தினம் அமெரிக்க அதிபர் பைடன் ஆற்றிய உரையில், “இன்றைய உலகுக்கு ஏற்றவாறு திறம்பட செயலாற்றும் விதமாக மேலும் பல்வேறு உறுப்பினர்களை உள்ளடக்கி செயல்பட வேண்டிய தருணத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளது.
காலத்துக்கேற்ற வகையில் அதில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.