உக்ரைன் போருக்கு ரஷ்யாவில் 3 லட்சம் பேரை திரட்ட அதிபர் புதின் உத்தரவிட்டதற்கு எதிராக, ரஷ்யாவின் பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மொத்தம் 30 நகரங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதலை தொடங்கி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர்.
இதனால் உக்ரைன் போரை மிகப் பெரிய அளவில் தொடர ரஷ்ய அதிபர் புதின் முடிவுசெய்தார். அவர் நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் டி.வி.யில் ஆற்றிய உரையில், “மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அழிக்க நினைக்கின்றன. இதனால் உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போர் தொடுக்க வேண்டியுள்ளது. 20 லட்சம் வீரர்களுடன் போர் தொடுக்க வேண்டும். இதில்ஒரு பகுதியினர் சுமார் 3 லட்சம் பேரை ரஷ்யமக்களிடம் இருந்து திரட்டும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளேன். ரஷ்யாவையும் அதன் எல்லைகளையும் பாதுகாக்க அணு ஆயுத தாக்குதலுக்கும் தயார். உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஜெர்மனியின் நாஜிப் படைகளுக்கு எதிராகபோரிட ரஷ்யாவில் இளைஞர்கள் திரட்டப்பட்டனர். அதற்குப்பின் போருக்கு மக்களைதிரட்ட இப்போதுதான் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் போரை தொடர, மக்களை திரட்டும்நடவடிக்கைக்கு ரஷ்யாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முக்கிய நகரங்களில் மக்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். “ஒருவர் இஷ்டத்துக்குசெயல்படுகிறார். அவர் வெளியேறட்டும்” என போராட்டக்காரர் ஒருவர் அதிபர் புதினை மறைமுகமாக தாக்கி கோஷமிட்டார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த போராட்டத்தில் 100 பேர் கைது செய்யப்பட்டனர். 30 நகரங்களில் நடந்த போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்களுக்கு ரஷ்ய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
உக்ரைன் போருக்கு வீரர்களை திரட்ட ரஷ்ய அதிபர் உத்தரவிட்டதற்கு சிலர் ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்து தங்கள் கருத்தைபதிவு செய்தனர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த ரஷ்ய ராணுவத்தினர், அதிபருக்கு ஆதரவாக குரல் கொடுத்த நபர்களை, ‘வாங்க போருக்கு செல்லலாம்’ என வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அதனால் அந்த நபர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
விமான டிக்கெட் விற்பனை நிறுத்தம்
உக்ரைன் போருக்கு மக்களை திரட்ட ரஷ்ய அதிபர் புதின் நேற்று முன்தினம் உத்தரவிட்டதும், ரஷ்யாவிலிருந்து அண்டை நாடுகளான அர்மேனியா, ஜார்ஜியா, அஜர்பைஜான் மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இஸ்தான்புல் நகருக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட்கள் அனைத்தும் வரும் சனிக்கிழமை வரை முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து 18 முதல் 65 வயது வரையுள்ளவர்களுக்கு விமான டிக்கெட் விற்பனை செய்வதை ரஷ்ய விமான நிறுவனங்கள் நிறுத்தின. ரஷ்ய இளைஞர்கள், பாதுகாப்பு அமைச்சகத்தில் அனுமதி பெற்ற பின்பே, வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.