போலி ஆவண பதிவுகளை பத்திரப்பதிவுத் துறையே ரத்து செய்யும் நடைமுறை 28-ந்தேதி தொடக்கம்

259 0

வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக ஆவணங்கள் பதிவு அதிகரித்து, அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பத்திரங்களை பதிவு செய்ய வருவோர் ஆதார் எண் மூலம் சரி பார்த்தல், டோக்கன் முறை, சரியான நிலமதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் இத்துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர்.

கடந்த காலங்களில் நடந்த மோசடி பதிவுகளின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, போலி ஆவண பதிவுகளை பதிவுத் துறையே ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறைப்படுத்துவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 28-ந்தேதி தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்த பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21-ந்தேதி வரை 16 லட்சத்து 59 ஆயிரத்து 128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.8,082 கோடி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.2,325 கோடி அதிகமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.