யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வடமராட்சி கிழக்கின் ஒரு கிராமமான நாகர்கோவில் என்றவுடனேயே கைக்கெட்டும் உயரத்தில் பழங்களைப் பிடுங்கக்கூடிய நாவல் மரங்களும், இந்துமா கடலின் பேரலைகளை ஊருக்குள் நுழையவிடாது தடுத்துநிற்கும் மணல் மலைகளும்தான் முதலில் நினைவுக்கு வரும்.
அதற்கு அடுத்ததாக நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயமும், போர்க்காத்தில் அந்நிலம் முழுவதும் லட்சக்கணக்கில் விதைக்கப்பட்ட வெடிபொருட்களும் நினைவுக்கு வரும்.
ஆனால் இதனைவிட துயரமிகு நினைவுகள் அந்த வெண்மணல் பரப்பிற்கு உண்டு. நிலமிழந்து – வாழிடமிழந்து – கூடிவாழ்ந்த உறவுகள் இழந்து அலைந்த நாட்களில் அன்போடு அரவணைத்து அடைக்கலம் தந்ததும் இந்தச் சுடு மணல் நிலம்தான்.
நாகர்கோவில் எனும் கிராமம்
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள அனேக கிராமங்கள் படுகொலைகளாலும், இடப்பெயர்வினாலும்தான் பிரபலம் பெற்றுள்ளன. அந்தவகையில் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் வடமராட்சி கிழக்கு பகுதியில் நாகர்கோவில் எனும் கிராமம் உள்ளதென்ற செய்தி பலருக்கும் தெரிந்தது.
1990ஆம் ஆண்டிலிருந்து வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின்போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிகமாகத் தங்கும் இடமாக நாகர்கோவில் மாறியது.
1990இல் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன், தட்டுவன்கொட்டி கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள், வலிகாமம் வடக்கின் மயிலிட்டி, காங்கேசன்துறை, பலாலி, வயாவிளான், வளலாய் போன்ற இடங்களிலில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள், தீவகத்தின் மீது இராணுவம் நடத்திய தாக்குதலினால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள், வெற்றிலைக்கேணியில் இராணுவம் தரையிறங்கியதனால் அங்கிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் ஓரிடத்தில் தங்கவைத்துக் காப்பாற்றிய இடம் நாகர்கோவில்.
இவ்வாறு இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் உள்ளடக்கி, மட்டக்களப்பு முகாம், திருகோணமலை முகாம், ஆனையிறவு முகாம், தட்டுவன்கொட்டி முகாம், பலாலி முகாம், காங்கேசன்துறை முகாம், வெற்றிலைக்கேணி முகாம், ஆழியவளை முகாம், மாதகல் முகாம், இளவாலை முகாம், மயிலிட்டி முகாம் என மொத்தமாக பதினொரு நலன்புரி நிலையங்களைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் உருவாக்கியிருந்தன.
அங்கு 3000இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டிருந்தன. வெண்ணிறமான பெரு மணல் வெளியில் மிகப்பிரம்மாண்டமான குடியிருப்புத் தொகுதியாக அது கணிப்பிடப்பட்டிருந்தது. திடீரென முளைத்த சிறுநகர் போல போர்ச்சத்தங்களின் நடுவிலும் சலசலத்துக்கொண்டிருந்தன அக்கூடராங்கள்.
இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்குமான நிவாரண உதவிகளை நாகர்கோவில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் வழங்கியது. அன்றாட உணவுத் தேவைக்கான மிகுதிப் பொருட்களை முகாம்களுக்கு மத்தியில் இயங்கிவந்த பொதுச்சந்தை வழங்கியது. நாகர்கோவில் மகாவத்தியாலயம் சிறிய பாடசாலையாக இருப்பினும், தன் மொத்த வளத்தையும் – பலத்தையும் பயன்படுத்தி 2500 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வியினைப் போதித்தது.
மரங்களின் கீழும், வெட்டவெளியிலும் தற்காலிக வகுப்பறைகள் இயங்கின. அகதியாக்கி அலையவிடப்பட்டிருப்பினும் கல்வி எனும் ஒளிர் விளக்கை அணையவிடாது பாதுகாக்க அப்பாடசாலையின் ஆசிரியர்கள் அரும்பாடுபட்டனர்.
கடற்சமர்
இவ்வாறு தமிழ் மக்கள் அகதி முகாம்களுக்குள் அவலவாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கையில்தான், முல்லைத்தீவின் செம்மலைக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் கடற்படைக்குமிடையில் கடற்சமர் ஒன்று ஏற்பட்டது.
20.09.1995 அன்று குறித்த கடற்பரப்பினூடாக பயணித்த, இலங்கை கடற்படையின் ‘ ஐரிஸ்மோனா’ எனும் சரக்குக் கப்பலை கடற்புலிகள் சிறைபிடித்தனர். அந்தக் கப்பலைக் கொண்டுவந்து, நாகர்கோவில் கிராமத்தின் கிழக்குப் பக்கமாக இருந்த குடாரப்புத் தளத்தில் நங்கூரமிட்டிருந்தனர். எனவே தமது கப்பலையும், பொருட்களையும் மீட்பதற்கு இலங்கை கடற்படை பெரும்பாடுபட்டது.
அது சாத்தியமற்றுப்போக, கப்பல் மீது விமானத்தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்தது. பேரிரைச்சலோடு வானில் இரண்டு முறை வட்டமடித்து மூன்றாம் முறை தாக்குதல் நடத்தும் ‘புக்காரா’ ரக விமானங்கள் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் புலிகளது விமான எதிர்ப்புத் தாக்குதல்களின் காரணமாக விமானத்தாக்குதலைக் கப்பல் மீது நடத்தமுடியாமல் போனது.
எனவே வேறு இலக்குகள் மீதாவது தாக்குதலை நடத்தி தமது கோபத்தைத் தீர்க்கக் கங்கணம்கட்டி நின்றன புக்காரா விமானங்கள். அன்று செப்ரெம்பர் மாதம் 22 ஆம் திகதி. இந்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து ஆகுதியாகிய தியாகி திலீபனின் 8ஆவது நினைவுநாளினைப் நாகர்கோவில் முகாம் மக்கள் அனுஸ்டிக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.
சிவப்பு – மஞ்சள் வர்ணக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நினைவேந்தல் மண்டபம் உணர்வெழுச்சி பூண்டிருந்தது. மதியநேரமாக இருந்தபடியினால், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் நிவாரணம் பெறக் காத்திருந்தவர்கள், சந்தைக்குக் கறி வாங்க வந்திருந்தவர்கள், திலீபனின் நினைவு நிகழ்வுகளில் கலந்துகொள்ள வந்தவர்கள், பாடசாலை இடைவேளை நேரத்தில் பறந்து – திரிந்து விளையாடும் வெள்ளைச் சீருடையணித்த மாணவர்கள் என நாகர்கோவில் கிராமமே களைகட்டியது.
நாகர்கோவில் மகாவித்தியாலயத்திற்கு அண்மையாக நின்றிருந்த பிரம்மாண்டமான புளியமரம் இவையனைத்தோடும் ஒன்றித்திருந்தது. நடக்கப்போகும் விபரீதத்தை உணராது துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த அப்பாவி மாணவமணிகளிடத்தில் அந்த மரத்தினால் கூடக் கருணை காட்ட இயலவில்லை.
அசையாது நின்றிருந்தது. அவ்வேளையில் நாகர்கோவிலில் தஞ்சமடைந்திருந்த அகதிகள் முகாம் வான் வலயத்தினுள் நுழைந்த இரண்டு புக்காரா விமானங்கள், பேரிரைச்சலோடு தாழப்பறந்தன.
அந்த விமானங்கள் தம் மீது தாக்குதல் நடத்தப்போகின்றன என்பதை உணர்ந்த மக்கள் திசையறியாது சிதறியோடினர். பற்றைக்காடுகள், முட்புதர்கள், நாவல் மரங்கள், பனைமட்டையினால் வரையப்பட்ட வேலிகள், மணல் திட்டுக்கள் என எங்கெல்லாம் உயிரை மறைத்துத் தப்பித்துக்கொள்ள முடியுமோ அங்கெல்லாம் நிலையெடுத்து கொண்டனர்.
பாடசாலைக்குள் பதுங்குழிகளுக்குள்ளும், மேசைகளின் கீழும் பதுங்கிக்கொள்ள இடமற்ற மாணவர்கள், பாடசாலைக்கு வெளியிலும் அழுது, கதறி சிதறியோடினார்கள். பாடசாலைக்கு அருகில் நின்ற பெரிய புளியமரம் அந்த மாணவச்சிறார்கள் பாதுகாப்புக் கூடாரமாகத் தென்பட்டது.
பிரம்மாண்ட மரம் நொடிப்பொழுதில் சிதறிப்போனது. மரத்தின் அடியில் பாதுகாப்புத் தேடிப் பதுங்கியிருந்த பாடசாலைப் பிள்ளைகள் 25 பேர் அந்த இடத்திலேயே உடல்சிதறிப்போயினர். அவ்விடத்திலேயே பொதுமக்கள் ஐவர் என மொத்தமாக 39 பேர் பலிகொள்ளப்பட்டனர். 35 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
வெண்மணற்றரை முழுவதுமே பிஞ்சுக் குழந்தைகளில் குருதியால் நனைந்தது. பாடசாலை வெண்ணுடைகள் முழுவதும் கொதி ரத்தத்தால் நனைந்தன. அந்தப் படுகாயங்களிலிருந்து தப்பித்து வந்த பலர், பின்நாட்களில் ஏற்பட்ட சுனாமிப் பேரலையிலும், போரிலும் சிக்கி இறந்துபோனார்கள். அந்த அவலத்தின் சாட்சியாக இன்னும் ஒரு சிலர் உலகப் பந்தின் எங்காவது ஓர் முலையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை எதிர்பார்த்து வாழக்கூடும்.
ஜெரா