அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்ந்து சுயாதீனமாக செயற்படும் டளஸ் அணியினருக்கு சபையில் உரையாற்றுவதற்கான நேரத்தை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து இணக்கப்பாட்டுடன் பெற்றுக் கொடுக்க முடியும் என ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தங்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் சிறப்புரிமைகள் மீறப்படுவதாக அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்ந்து சுயாதீனமாக செயற்படும் பொதுஜன பெரமுனவின் டளஸ் அழகப்பெரும தலைமையிலான 13 பேர் கொண்ட குழு தமக்கான நேரத்தை பெற்றுத் தருமாறு இன்று சபாநாயகரை கேட்டுக் கொண்டது.
டலஸ் அணி தரப்பினரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அது தொடர்பில் சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி சபையில் தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தில் தமக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் சர்வதேச அமைப்புகளிடம் முறையிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
அதன்படி 13 எம்.பிக்களின் கையெழுத்துகளுடன் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம், பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் தெற்காசியாவின் சார்க் ஒன்றிய செயலாளர் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பி இருக்கி்ன்றோம் என தெரிவித்தார்
பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தில் வெஸ்ட் மினிஸ்டர் முறைமையே நடைமுறையில் உள்ளது. அதனை மீறி செயல்படும் சம்பிரதாயம் கிடையாது. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியுமே இருக்கின்றது.
அதற்கு இடைப்பட்டதொன்று இல்லை. அவர்கள் ஆளும் கட்சியில் இருக்கவேண்டும் அல்லது எதிர்க்கட்சியில் இருக்கவேண்டும்.
அத்துடன் பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து எதிர்க்கட்சியில் சுயாதீனமான செயற்பட தீர்மானித்து, எதிர்க்கட்சிக்கு சென்றுள்ளவர்கள் கட்சியின் தீர்மானத்துடன் அவ்வாறு செயல்படவில்லை.
அதனால் தனித்து ஆளும் கட்சி மாத்திரம் அவர்களுக்கான உரையாற்றும் நேரத்தை வழங்க முடியாது. அதனால் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து அதற்கான நேரத்தை பெற்றுக் கொடுக்க முடியும் என்றார்.