வருட இறுதியில் 800 வைத்தியர்கள் ஓய்வு பெற வேண்டியேற்படும்

128 0

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு – செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கமைய 60 வயது பூர்த்தியான அரச உத்தியோகத்தர்கள் ஓய்வுபெறுமிடத்து இவ்வருட இறுதியில் 300 விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட 800 வைத்தியர்கள் ஓய்வு பெற வேண்டியேற்படும்.

இது வைத்தியசாலை கட்டமைப்பில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே வைத்தியர்களுக்கான ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக உயர்த்த வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளது.

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை, மருந்து தட்டுப்பாடு, சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் போஷனைக்குறைபாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் , பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்குமிடையிலான சந்திப்பொன்று 21 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் வலியுறுத்தியுள்ளது.

இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில் ,

60 வயது பூர்த்தியான அரச உத்தியோகத்தர்கள் இவ்வருடத்தில் ஓய்வு பெற வேண்டும் என்று இடைக்கால வரவு – செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறெனில் இவ்வருட இறுதியில் 300 விசேட வைத்திய நிபுணர்களும் , 500 தர நிலை வைத்தியர்களும் ஓய்வு பெற வேண்டியேற்படும்.

மறுபுறம் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக சம்பளமற்ற விசேட விடுமுறையில் வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என்று அரசாங்கம் அறிவித்ததையடுத்து, பெருமளவான வைத்தியர்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இவ்வாறு ஒரே சந்தர்ப்பத்தில் இவ்விரண்டு செயற்பாடுகளும் இடம்பெறும் போது வைத்தியசாலைக் கட்டமைப்பு பாரியளவில் பாதிக்கப்படும். எனவே வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக உயர்த்துமாறு பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கப்பெற்றது.

அத்தோடு மருத்துவத்துறை மாணவர்களின் பட்டப்படிப்பு தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பினை நிறைவு செய்யக் கூடிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இவை தவிர நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடானது மருத்துவ துறைக்கு பாரிய சவாலாகக் காணப்படுகிறது. மருந்து இறக்குமதிக்கு தேவையான நிதி திறைசேரியில் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் , மருந்து கொள்வனவுடன் தொடர்புடைய நிறுவனங்கிடையில் முறையான ஒருங்கிணைப்பு இன்மை சிக்கலாக்க காணப்படுகிறது.

எனவே இதற்கு பொறுத்தமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு முறையான பொறிமுறையொன்றை ஸ்தாபிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

அத்தோடு சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புக்கள் , வெளிநாடுகளிடமிருந்து கிடைக்கப்பெறும் நன்கொடைகளை முறையாக பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டமை;க்கமைய, சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்றை அமைப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது என்றார்.