யேர்மனியில் தமிழ்க்கல்விக்கழக தமிழாலயங்களினை ஒருங்கிணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினால் மாநில ரீதியாக நடைபெற்றுவரும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் நிறைவாக வடமாநிலத்தில் ஒஸ்னாபுறுக் நகரில் கடந்த 17.09.2022 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
தொடக்க நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு யேர்மனி நாட்டின் தேசியக் கொடியும் தமிழீழ தேசியக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்ட பின் தமிழ்க் கல்விக் கழகத்தின் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது.
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு எமது தேசத்தின் விடியலுக்காக உண்ணா நோன்பிருந்து தனது இன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபன் அவர்கள், உண்ணா நோன்பிருந்த மூன்றாவது நாள் மிகவும் எழுச்சியோடும் உணர்வோடும் நினைவு கூரப்பட்டது.
அகவணக்கத்தோடு ஆரம்பித்த மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் தமிழாலய மாணவ மாணவிகளின் வெற்றிச்சுடர் ஏந்தல் நிகழ்வோடும் உறுதிமொழி எடுத்தலோடும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
மாணவ மாணவிகளது அணிநடை மற்றும் அணிவகுப்பு மரியாதைகளோடு விளையாட்டுப் போட்டிகள் மிகவும் சிறப்பாகத் தொடங்கியது.
ஒவ்வொரு பிரிவினருக்குமான போட்டிகள் நிறைவு பெறும் போது, வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டன.நிறைவாக சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான வெற்றிக்கேடையங்களும் புள்ளிகள் அடிப்படையில் வழங்கி விளையாட்டு வீரர்கள் மதிப்பளிக்கப்பட்டார்கள்.
2022 ஆம் ஆண்டின் வடமாநில மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்து மூன்றாம் இடத்தினை கம்பேர்க் (Hamburg)தமிழாலயமும் இரண்டாம் இடத்தினை பீலபெல்ட் (Bielefeld)தமிழாலயமும் முதலாம் இடத்தினை ஒஸ்னாபுறுக் (Osnabrück)தமிழாலயமும் பெற்றுக்கொண்டன.
வெற்றிக்கிண்ணத்தினை பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள் தமது வெற்றிக்கிண்ணத்தோடு மைதானத்தினை சுற்றி ஓடிவந்து தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
நிறைவாக தேசியக் கொடிகள் இறக்கி வைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரத்தோடும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் மிகவும் எழுச்சியோடு நிறைவு பெற்றது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.