கரோனாவினால் இன்னமும் அமெரிக்காவில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கரோனா தொற்று நீங்கிவிட்டதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஜோ பைடன் கூறும்போது, “ நீங்கள் கவனித்தால் யாரும் முகக்கவசம் அணிவதில்லை என்பது தெரியும். மாற்றம் நிகழ்கிறது என்று நம்புகிறேன்.அமெரிக்காவை பொறுத்தவரை கரோனா தொற்று நீங்கிவிட்டது. எனினும் சில பிரச்சினைகள் உள்ளன. ஆனால் நிலைமை சீராகி வருகிறது” என்றார்.
ஜோ பைடன் இவ்வாறு அறிவித்திருந்தாலும், கரோனாவினால் அறிவிக்கப்பட்ட பொது சுகாதார அவசரநிலையை நீக்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனாவினால் தினமும் அமெரிக்காவில் 400 அமெரிக்கர்கள்வரை இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கரோனா நீங்கிவிட்டது என்ற அறிவிப்பை ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் இந்த அறிவிப்பை குடியரசுக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில், 19,891 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கரோனாவினால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.