எந்த தொழிற்சாலை வந்தாலும் சிலர் திட்டமிட்டு எதிர்க்கின்றனர்

108 0

தூத்துக்குடிக்கு எந்த தொழிற்சாலை வந்தாலும் திட்டமிட்டு எதிர்ப்பவர்களை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்தின் 70-வது ஆண்டு பவள விழா வரும் 23-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக, விழாக் குழு ஆலோசகர்களும், பிரபல ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுமான ஜே.பி.ஜோ வில்லவராயர், பி.எஸ்.டி.எஸ்.வேல்சங்கர் ஆகியோர் கூறியதாவது:

தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் 5 ஆண்டுகளில் தூத்துக்குடி நகரம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும்.ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அது தொடர்பாக எதுவும் கூற விரும்பவில்லை. இந்த விஷயத்தில் அரசு தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் தூத்துக்குடிக்கு எந்த தொழிற்சாலை வந்தாலும் சிலர் திட்டமிட்டு எதிர்க்கிறார்கள்.

தொழிற்சாலைகள் வரவில்லை

இதனால் இங்கு வரவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சிமென்ட் தொழிற்சாலை போன்றவை வரவில்லை. திட்டமிட்டு எதிர்ப்பவர்களை அரசு அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத தொழிற்சாலைகள் தூத்துக்குடிக்கு வரவேண்டும். சுற்றுச்சூழல் விஷயத்தில் சமரசம் செய்யாமல் தொழிற்சாலைகளை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.