நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் குறித்து இந்த பத்தியில் ஏற்கெனவே பல தடவைகள் கருத்து வெளியிடப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு தடவை அது குறித்து எழுதவேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
அதற்கு காரணம் இலங்கையில் அந்த ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் பேரன் பிரதீப் ஜெயவர்தன கடந்தவாரம் வெளியிட்ட கருத்தேயாகும்.
முன்னாள் ஜனாதிபதியின் 116 வது பிறந்ததின நினைவாக கொழும்பில் கடந்தவாரம் (செப்.16) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதீப் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படவேண்டுமானால் ஜனாதிபதி ஆட்சிமுறை தொடரவேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தினார்.
” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை இல்லையென்றால்,நாடு பாரிய அரசியல் நெருக்கடிக்குள் மூழ்கியிருக்கும்.காலஞ்சென்ற ஜெயவர்தன 1977ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஆட்சிமுறையுடன் திறந்த பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்தினார்.ஜனாதிபதி ஆட்சிமுறை இன்று இல்லாமல் இருந்திருந்தால், அண்மையில் தோன்றிய நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் ஒருவரை தெரிவுசெய்வதில் பாராளுமன்றம் பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் என்பதால் நாடு படுமோசமான நெருக்கடிக்குள் மூழ்கியிருக்கும்.ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்கு நாம் ஒரு முடிவைக் கட்டவேண்டும்” என்று அவர் தனதுரையில் கூறினார்.
கொழும்பு மாநகரசபை உறுப்பினரான பிரதீப் தனது பேரன்புக்குரிய பாட்டனார் ஜெயவர்தன அறிமுகப்படுத்தியது என்பதால் ஜனாதிபதி ஆட்சிமுறை மீதான பற்றுதலை வெளிக்காட்டியிருக்கக்கூடும்.அது வேறு விடயம். ஆனால், முன்னென்றும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் கிளர்ச்சியின் மத்தியில் தோன்றிய அரசியல் நெருக்கடியை தணிப்பதற்கு ஜனாதிபதி ஆட்சிமுறைதான் கைகொடுத்தது என்ற அடிப்படையில் அவர் வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளமுடியாதது..இன்றைய நெருக்கடிகள் பலவற்றுக்கு காரணமாயமைந்த ஜனாதிபதி ஆட்சிமுறையை அதே நெருக்கடிகளில் இருந்து நாடு விடுபடுவதற்கு அவசியமானது என்று கூறுவது வேடிக்கையானது ; நாட்டு மக்களின் உணர்வுகளைை நிந்தனை செய்வதாகும்.
இன்று மக்களில் அதிகப்பெரும்பான்மையாவர்கள் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பை விரும்புகிறார்கள் என்பதை அண்மைய மாதங்களில் பல தன்னார்வ மற்றும் அறிவுஜீவி அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்புக்கள் தெளிவாக வெளிக்காட்டியிருந்தன.முன்னைய ஜனாதிபதிகளையும் விட கூடுதலான அதிகாரங்களை தன்வசம் வைத்திருந்த ஒரு ஜனாதிபதியை நாட்டை விட்டு வெளியேறவைத்த மக்கள் கிளர்ச்சியின்போது தவறான ஆட்சிமுறைக்கு எதிராக எழுந்த முழக்கங்கள் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிரானவை என்பதில் சந்தேகமில்லை.
மக்களும் அரசியல் சமுதாயத்தின் பெரும்பகுதியும் அந்த ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் என்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் ஒரு நேரத்தில், அதை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்கு ஒரு முடிவைக்கட்டவேண்டும் என்று பிரதீப் கூறுவது இதுவரையான அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கான முக்கிய காரணிகள் பற்றிய அவரின் தெளிவின்மையை காட்டுகிறது.
அண்மைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றம் ஜனாதிபதியாக தெரிவுசெய்ததை அடுத்து ஏதோ அரசியல் உறுதிப்பாடு ஏற்பட்டுவிட்டது போன்று அவரின் கருத்து அமைந்திருக்கிறது. உண்மையில் பாராளுமன்ற ஜனநாயகம் பலவீனப்படுத்தப்பட்டு, மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்காமல் எதேச்சாதிகாரப்போக்கு தீவிரமடைந்து அரசியல் உறுதிப்பாடு சீர்குலைந்ததை அடுத்தே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.ஜனாதிபதி ஆட்சிமுறையில் எந்தவித ஜனநாயக குணாம்சமும் கிடையாது.
கடந்த 44 வருடங்களாக நாடு ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் இருந்துவருகிறது.சுதந்திரத்துக்கு பின்னரான 76 வருடங்களில் இந்த ஆட்சிமுறையின் கீழேயே கூடுதலான காலப்பகுதிக்கு நாம் ஆளப்பட்டிருக்கிறோம். ஒரு முழு தலைமுறை அதன் கீழ்தான் வாழ்ந்திருக்கிறது.ஜனாதிபதி ஆட்சிமுறை எவ்வாறு இயங்கி வந்திருக்கிறது? எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது?கெடுதியான ஆட்சிமுறைப் போக்குகளுக்கு அது எவ்வாறு வழிவகுத்தது? என்பதையெல்லாம் நாம் அனுபவ வாயிலாக கண்டிருக்கிறோம்.பாராளுமன்றம், நீதித்துறை, அரசாங்கசேவை என்று சகல நிறுவனங்களும் ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் உருக்குலைக்கப்பட்டதன் விளைவுகளை மக்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் ;பொறுப்புக்கூறல்,சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சியை வரையறுக்கின்ற சகல அரசியல் பண்புகளும் உதாசீனம் செய்யப்பட்டிருக்கின்றன.
‘ நிறைவேற்று’ அதிகார ஜனாதிபதி பதவி என்பது அடிப்படையில் அதன் வரைவிலக்கணத்தின் படி ஜனநாயக விரோதமானது.அந்த பதவியை வகிப்பவரிடம் குவிந்திருக்கும் மட்டுமீறிய அதிகாரங்களை அவருக்கு இருக்கும் சட்ட விடுபாட்டுரிமையுடன் சேர்த்து பார்க்கும்போது அது ஜனநாயகத்துக்கு நேர்மாறானது என்பதை விளங்கிக்கொள்ளமுடியும்.படுமோசமான குற்றச்செயல்களுக்காக நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்நோக்கும் அரசியல்வாதி ஜனாதிபதியாக தெரிவானதும் அவற்றில் இருந்து விடுபடும் உரிமையை அனுபவிக்கக்கூடியதாக இருப்பதில் இருந்து அதன் ஜனநாயக விரோதம் பிரகாசமாக தெரிகிறது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியின் எதேச்சாதிகாரத்தன்மையின் பாதகங்களையும் அரசின் ஜனநாயக குணாதிசயங்களுக்கு அதனால் ஏற்பட்ட ஆபத்துக்களையும் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அனுபவரீதியாக கண்ட பிற்பாடும் அதை ஒழிப்பதற்கான முயற்சிகள் பயனளிக்கமுடியாத அரசியல் சூழ்நிலை தொடரவது பெரும் துரதிர்ஷ்டமாகும்.
ஜனாதிபதி ஆட்சிமுறையுடனான இலங்கையின் வாழ்வு தணிக்கமுடியாத அவல அனுபவமாக இருப்பதுடன் சுதந்திரத்தின் பின்னரான மிகவும் மோசமான காலப்பகுதியாகவும் விளங்குகிறது.மட்டுமீறிய அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி பதவி அடிமைத்தனமான, அண்டிப்பிழைக்கின்ற, ஊழல்தனமான, சந்தர்ப்பவாத அரசியல் வர்க்கம் ஒன்று உருவாவதற்கு பிரதான காரணமாக இருந்திருக்கிறது. ஆட்சிமுறையில் முன்னரும் ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் நிலவிவந்த போதிலும், ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பின்னர்தான் அவை படுமோசமாக தலைவிரித்தாடி இறுதியில் இன்று நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்து மக்களை நடுத்தெருவில் விட்டிருக்கின்றன.
ஜனாதிபதி ஆட்சிமுறை சிறுபான்மையின சமூகங்களுக்கு அனுகூலமானது ; ஜனாதிபதியை தெரிவுசெய்வதில் சிறுபான்மையின சமூகங்கள் செல்வாக்கை செலுத்தக்கூடிய நிலை இருப்பதால் ஜனாதிபதி அந்த சமூகங்களை அனுசரித்துசெல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும் என்று ஒரு மாயையும் முன்னர் கட்டமைக்கப்பட்டது.ஆனால்,அதை ராஜபக்சாக்கள் தங்களது மோசமான இனவாத அரசியலினால் ‘கச்சிதமாக ‘ நிர்மூலம் செய்தார்கள். ஜனாதிபதி ஆட்சிகளில்தான் சிறுபான்மையின சமூகங்கள் மோசமான அடக்குமுறைகளுக்கும் உரிமை மீறல்களுக்கும் முகங்கொடுக்கவேண்டியிருந்தது.ராஜபக்சாக்கள் அதை ஒரு உச்சநிலைக்கு கொண்டுசென்றார்கள்.
ஜனாதிபதியாக தெரிவாவதற்கு சகல சமூகங்கள் மத்தியிலும் கணிசமான ஆதரவைக்கொண்டிருக்கவேண்டும் என்ற ஒரு ஒப்பீட்டளவிலான ஜனநாயக சூழலை மாற்றி பெரும்பான்மைச் சமூகத்தின் தனியான ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவாக முடியும் என்பதை ராஜபக்சாக்கள் நிரூபித்தார்கள். ஆனால் அதற்காக அவர்கள் முன்னெடுத்த அரசியல் இலங்கை மக்களை முன்னென்றும் இல்லாத வகையில் இன,மத அடிப்படையில் பிளவுபடுத்தி மோசமான அரசியல் கலாசாரத்தை உருவாக்கியது.இன்னமும் கூட அவர்கள் அத்தகைய அரசியல் முன்னெடுப்புகள் மூலமாக மீட்சிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் போன்று தெரிகிறது.குடும்ப ஆதிக்க அரசியலை வலுப்படுத்தவும் ஜனாதிபதி ஆட்சிமுறை பெரிதும் உதவியிருக்கிறது.
ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எத்தனை வயதோ அதை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கும் அத்தனை வயது.அந்த ஆட்சிமுறையை ஒழிப்பதாக மக்களுக்கு தேர்தல்களில் வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதியும் அதைச் செய்யவில்லை.கோதாபய ராஜபக்ச ஒருவர்தான் அத்தகைய வாக்குறுதியை வழங்காதவர்.அந்த பதவியி்ன் மட்டுமீறிய அதிகாரங்களை அனுபவிப்பதிலேயே சகல ஜனாதிபதிகளும் அக்கறை காட்டினர்.
அவர்கள் உறுதியளித்த பிரகாரம் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவில்லை என்பதோ அல்லது ஒழிக்கமுடியவில்லை என்பதோ அந்த ஆட்சிமுறையை தொடரவேண்டும் என்ற கருத்தை நியாயப்படுத்துவதற்கு முன்வைக்கப்படக்கூடிய வாதம் அல்ல.
கடந்தமாத முற்பகுதியில் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய தனது கொள்கைவிளக்க உரையில் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து நழுவல் போக்கில்தான் கருத்துவெளியிட்டார். அதாவது அந்த ஆட்சிமுறையை ஒழிப்பதாக உறுதியளித்து பதவிக்கு வந்த எவரும் அதை செய்யவில்லை என்பதனாலும் ஒரு அரசாங்கம் அந்த ஆட்சிமுறையை ஒழித்தால் பிறகு பதவிக்கு வரும் இன்னொரு அரசாங்கம் அதை மீண்டும் அறிமுகப்படுத்தாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதனாலும் இதுவிடயத்தில் தேசிய கருத்தொருமிப்பை காணவேண்டியது அவசியம் ; அதனால் அத்தகைய கருத்தொருமிப்பை காணவேண்டியது உத்தேச மக்கள் சபையின் பொறுப்பு என்று அவர் கூறியதை காணக்கூடியதாக இருந்தது.
ஜனாதிபதி ஆட்சிமுறை தொடரவேண்டுமா இல்லையா?எத்தகைய ஆட்சிமுறை நாட்டுக்கு பொருத்தமானது? ஆட்சிமுறையில் செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்கள் எவை ? என்பதை இன்னமும் அமைக்கப்படாத மக்கள் சபையிடம் ஒப்படைத்துவிட்டு விக்கிரமசிங்க ஒதுங்கிக்கொண்டார்.
ராஜபக்சாக்களுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தல்களில் எதிரணியின் சார்பில் பொதுவேட்பாளர்கள் களமிறக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு தனது கட்சியும் ஆதரவு என்பது போன்று காட்டிக்கொண்டாலும் உண்மையில் விக்கிரமசிங்க அதை மானசீகமாக விரும்புபவரல்ல.
தேர்தல்முறை சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் 6 மாதங்களுக்குள் ஒரு உறுதியான தீர்மானத்துக்கு வரவில்லையென்றால், நாட்டு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்புக்கு போகப்போவதாக கடந்தவாரம் ஜனாதிபதி அவகாசம் வழங்கி எச்சரிக்கை விடுத்தார்.இதே அவகாசத்தை ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பிலும் அவரால் ஏன் அறிவிக்கமுடியாது. அந்த ஆட்சிமுறை ஒழிப்புக்கு இன்று காணப்படுவதைப் போன்று மக்கள் மத்தியில் அமோக ஆதரவு முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. இந்த அரிய சந்தர்ப்பம் தவறவிடப்படக்கூடாது என்பது உண்மையான முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் வேண்டிநிற்கும் ஜனநாயக சக்திகளின் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும்.
ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்கு முடிவுகட்டவேண்டும் என்று ஜே.ஆரின் பேரனுக்கு இருப்பதைப் போன்று அவரின் நெருங்கிய உறவுக்காரர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கும் விருப்பம் இருக்கிறதோ யாரறிவார்? அந்த ஆட்சிமுறை ஒழிப்பின் மூலம் முன்னெடுக்கப்படக்கூடிய அரசியல் நிலைமாற்றத்தின் ஊடாக நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரு அரசியல் தலைவராக அவர் தன்னை காண்பிக்கவில்லை.
தனபாலசிங்கம்