நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கும் தேசிய சபை பெரும் உறுதுணையாக அமையும்.
அத்துடன் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடுகளை எட்டுவதற்கான அதிகாரம் இந்த தேசிய சபைக்கு காணப்படுகின்றது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) தேசிய சபை தொடர்பான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சபாநாயகரை தலைவராகக் கொண்டு பிரதமர்,சபை முதல்வர்,எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகியோருடன் அரசியல் கட்சிகளின் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளதற்கிணங்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்து 35 உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த தேசிய சபை அமைக்கப்படவுள்ளது.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கு வழிகாட்டுதல் தொடர்பில் பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளை தீர்மானிப்பதற்கும் இந்த சபை மூலம் முடியும்.
அத்துடன் துறை சார் மேற்பார்வை குழுக்கள், அரசாங்க நிதி தொடர்பான குழு, அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழு, வங்கித் தொழில் மற்றும் நிதி சேவைகள் தொடர்பான குழு, வழிவகைகள் தொடர்பான குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு மற்றும் அரசாங்க நிதிகளை கட்டுப்படுத்தும் குழுக்கள் ஆகியவற்றிலிருந்து அறிக்கைகளை கோருவதற்கான தத்துவங்களையும் இந்த சபை கொண்டிருப்பது சிறப்பம்சமாகும்.
இந்த தேசிய சபைக்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக மூன்று பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய செயற்படுவதற்காக சபாநாயகர் தலைமையில் தெரிவுக்குழு நியமிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது கொள்கை விளக்க உரையில் அது தொடர்பில் குறிப்பிட்டுள்ள நிலையில் அதனை சாத்தியமாக்கும் வகையில் அனைத்து கட்சிகளினதும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களிலிருந்து மீள்வதற்கும் விவசாயம், மீன் பிடித்துறை, சிறு கைத்தொழில் துறை, பொருளாதாரம் சார்ந்த உற்பத்தித் துறை, ஏற்றுமதித் துறை ஆகியவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான வேலைத் திட்டங்களை இந்த சபை மூலம் உருவாக்க முடியும்.
இந்த நிலையான வேலைத் திட்டத்திற்கு பாராளுமன்றம், அமைச்சரவை போன்றே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடியும். அதனால் நாட்டின் தற்போதை நிலைமையில் தேசிய சபை மிகவும் அத்தியாவசியமானதொன்றாகவே நாங்கள் காண்கின்றோம் என்றார்.