பசிக் கொடுமையால் மக்கள் போராட்டம் வெகுவிரைவில் தீவிரமடையும்

131 0

எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு கண்டு விட்டோம். இனி பிரச்சினையில்லை என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. வெகுவிரைவில் பசியின் கொடுமை மக்கள் போராட்டமாக தீவிரமடையும்,அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் பொறுப்புடன்,முறையாக செயற்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (20) பிரதரமரால் முன்வைக்கப்பட்ட தேசிய சபை பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய சபையை ஸ்தாபிக்கும் யோசனையை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கடந்த ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி முன்வைத்தோம்.

தேசிய சபையின் பிரதான நோக்கம் கூட்டு பொறுப்பினை அடிப்படையாக கொண்டதாக காணப்பட வேண்டும் என பரிந்துரைத்தோம்.

பிரதமர்,அமைச்சரவை மற்றும் அமைச்சரவையின் விடயதானங்கள் உட்பட முக்கிய தீர்மானங்கள் தேசிய சபை ஊடாக எடுக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்தோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி விவசாயத்துறை தொடர்பில் தனித்து எடுத்த தீர்மானம் இன்று பாரிய விளைவை ஏற்படுத்தியுள்ளது. அவரது தனி தீர்மானத்துக்கு ஒட்டுமொத்த உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது.

அதனால் தேசிய சபை ஊடாக எடுக்கும் சகல தீர்மானங்களும் கூட்டு பொறுப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

நாம் முன்வைத்த தேசிய சபை யோசனைக்கும்,தற்போது அரசாங்கம் முன்வைத்த தேசிய சபை பிரேரணைக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் உள்ளன.தற்போதைய நிலையில் கூட்டுபொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும். அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கையில் கூட்டுப்பொறுப்புடன் செயற்படுவது சாத்தியமற்றதாகும்.

நாட்டில் வரையறுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கையிறுப்பை செலுத்தி எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொண்டால் மாத்திரம் சமூக மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.கைத்தொழில் துறைக்கான மூல பொருட்கள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டோம் இனி பிரச்;சினையில்லை என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது தவறானதாகும்.ஆரம்பத்தில் தோற்றம் பெற்ற மக்கள் போராட்டம் எரிபொருள்,எரிவாயு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தது.

சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பசியின் கொடுமையினால் தோற்றம் பெறும் மக்கள் போராட்டம் தீவிரமானதாக அமையும்.ஆகவே மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய சபை ஊடாக தீர்வு முன்வைக்கப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்குவோம் என்றார்.