சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை தொடர்பில் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க வேண்டும்

204 0

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் பிரதான அரச வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும்.

இதனால் நாட்டில் மக்கள் போராட்டம் தீவிரமடையும். ஆகவே நாணய நிதியத்தின் நிபந்தனை தொடர்பில் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என சுயாதீன உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற தேசிய சபை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் தேசிய சபை ஊடாக சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான நம்பிக்கையை பெற்றுக்கொள்ள அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பினால் தேசிய தொழிற்துறையினர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும் என்பதை பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.தேசிய சபையின் சகல அரசியல் கட்சிகளும் அங்கம் வகிக்கும் வாய்ப்பு உள்ளதால் தேசிய சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.நிறைவடைந்துள்ள காலாண்டுகளில் நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளதுடன் மிகுதி காலாண்டுகளிலும் பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடையும் என எதிர்வு கூறியுள்ளன.

எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு கண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுவது தவறானதாகும். நாட்டு மக்கள் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை பயன்பாட்டை குறைத்துக் கொண்டார்கள். மின்சார பாவனை 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளன.

எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கான மக்களின் பாவனையின் கேள்வி குறைவடைந்துள்ளமை சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையின் பாதிப்பை எடுத்துக்காட்டுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகஷ்தர் மட்ட இணக்கப்பாட்டின் நிபந்தனைகள் உணர்வுபூர்வமானது என குறிப்பிடப்படுகிறது.அரசாங்கம் விரும்பினாலும்,விரும்பாவிடினும் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிச்சயம் நடைமுறைப்படுத்த நேரிடும்.

சர்வதேச மற்றும் தேசிய கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகிறது,அரசாங்கத்தின் தேசிய கடன் 125 ரில்லியன்களாக காணப்படுகிறது.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகிய இரு பிரதான அரச வங்கிகளுக்கும் நட்டமடையும் அரச நிறுவனங்கள் அனைத்தும் கடன் செலுத்த வேண்டியுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படும். அரச வங்கி கட்டமைப்பு பாதிக்கப்பட்டால் ஊழியர் நம்பிக்கை நிதியம்,மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் பாதிக்கப்படும்.

நாட்டு மக்களின் சேமிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டால் நாட்டில் பாரிய மக்கள் போராட்டம் தீவிரமடையும் அதனை பாராளுமன்றத்தினால் கூட கட்டுப்படுத்த முடியாது. ஆகவே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் குறித்து கொள்கை மட்டத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.