திருமணம் செய்வதாக இலங்கை பெண்களை ஏமாற்றி நிதிமோசடி செய்த நைஜீரிய ஆசாமி கைது

153 0

போலி அடையாளங்களை காண்பித்து இலங்கைப் பெண்களை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த குறித்த நைஜீரியப் பிரஜை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர் சமூக ஊடகங்கள் ஊடாக  ஐரோப்பாவில் வசிக்கும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் போன்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதையடுத்து சந்தேகநபர் இலங்கையிலுள்ள பெண்களுக்கு பேஸ்புக் மூலம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அத்துடன் பெறுமதியான பரிசுப் பொதிகளை சுங்கத்திணைக்களத்தில் இருந்து அகற்றுவதற்கு பணம் தேவையாகவுள்ளதாக தெரிவித்து பெண்களிடம் இருந்து பெரும் தொகை பணத்தை கோரியுள்ளார்.

இந்நிலையில், குறித்த நபரால் ஏமாற்றப்பட்ட பெண்ணொருவரால் வைப்பிலிடப்பட்ட பணத்தை மஹரகமவில் உள்ள ஏ.டி.எம் இயந்திரமொன்றில் இருந்து எடுக்க வந்த நிலையில், குறித்த நைஜீரிய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த நபரை போன்று நைஜீரியர்கள் குழுவொன்று இவ்வாறான நிதி மோசடிகளில் ஈடுபட்டுவருவது அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.