அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை உவெஸ்லி கல்லூரியில் தொழில்நுட்ப பீடம் அமைப்பதற்காக கல்வி அமைச்சால் ஒதுக்கப்பட்ட 4 கோடியே 35 இலட்சத்து 33 ஆயிரத்தி 991 ரூபா 82 சதத்திற்கு என்னவாயிற்று எனக்கேள்வி எழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் மாயமாகியுள்ள 4 கோடிக்கும் அதிகமான நிதி தொடர்பில் ஆராய கல்வி அமைச்சு விசேட குழுவை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2020-06-15 ஆம் திகதி கல்வி அமைச்சின் ஊடாக உவெஸ்லி உயர்தர பாடசாலைக்கு தொழில்நுட்ப பீடம் அமைப்பதற்காக 4 கோடியே 35 இலட்சத்து 33ஆயிரத்தி 991 ரூபா 82 சதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அதேபோன்று 27-07-2020ஆம் ஆண்டு பத்திரிகையில் கேள்விமனு கோரப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அந்த கிழக்கு மாகாண தொழில்நுட்ப பிரிவுக்கட்டிடம் கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளரின் அனுமதியோடு அகற்றப்பட்டுள்ளது. 5 வகுப்பறைகளைக்கொண்ட கட்டிடமும் கணினி அறையும் அகற்றப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நான் வினவிய போது கல்வி அமைச்சர் உரிய பதிலளிக்கவில்லை.. 2000 க்கு அதிகமான மானவர்கள் கல்வி கற்கும் ஒரு உயரிய பாடசாலையில் இருந்த கட்டிடத்தையும் அகற்றிவிட்ட நிலையில் தொழில்நுட்பபீடம் அமைப்பதாக கூறி ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்ன.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நடக்கின்ற சூழ்ச்சி கரமான வேலைத்திட்டங்கள். தமிழ் பிரதேசங்களில் உள்ள பாரிய குறைபாடு.அபிவிருத்தி நடப்பதாக கூறுவார்கள். அத்திபாரங்கள் போடப்படும்.பின்னர் இடையில் எல்லாம் நிறுத்தப்படும்.
எனவே உவெஸ்லி உயர்தர பாடசாலைக்கு தொழில்நுட்ப பீடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 4 கோடியே 35 இலட்சத்து 33ஆயிரத்தி 991 ரூபா 82 சத நிதிக்கு என்ன நடந்தது என்பதனைக் ஆராய கல்வி அமைச்சு குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார்,
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் 02-03-2021இலஇகிஃமா 20இ06இ01 கடித்த ஊடாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கல்முனை உவெஸ்லி பாடசாலையில் புதிய தொழில்நுட்ப பீடம் ஒன்றை அமைப்பதற்கு பதிலாக அப் பாடசாலையில் அமைந்துள்ள பழைய கட்டிடமொன்றை தொழிநுட்ப பீடமாக மாற்றுதல் பொருத்தமானதாக இருக்குமென வழங்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் கட்டிடத்தின் திருத்தப்பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
புதிய தொழில்நுட்ப பீடம் ஒன்றை அமைப்பதற்கான கட்டிடத் தேவை ஏற்படாத நிலையில் மேற்படி கல்லூரியில் உள்ள கட்டிடம் திருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தொழில்நுட்பபீடத்திற்கான புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனின் நிதி தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க இருவார்களா அவகாசம் கோருகின்றேன். தற்போது கல்வி அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளார். அத்துடன் நானும் கல்வி இராஜாங்க அமைச்சராக பதவியேற்று இரு தினங்களே ஆகியுள்ள நிலையில்தான் இந்த கேள்விக்கான சரியான பதிலை வழங்க இரு வார கால அவகாசம் கோருகின்றேன் என்றார்.