போராட்டக் கலத்தின் முன்னணி செயற்பாட்டாளர், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பிறந்த தினத்தை சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைமையகம் முன்பாக போராட்டக்காரர்கள் கொண்டாடியுள்ளனர்.
கிருளப்பனையில் அமைந்துள்ள சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைமையகம் முன்பாக நேற்று (18) இரவு 8.30 மணியளவில், வசந்த முதலிகேவின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், அங்கு கேக் வெட்டி அவரது பிறந்த தினத்தை கொண்டாடினர். அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான அவரது கைது மற்றும் தடுப்புக் காவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணமும் போராட்டக்காரர்கள் நடந்துகொண்டனர்.
எவ்வாறாயினும் , வசந்த முதலிகே, பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கீழ் உள்ள தங்காலை தடுப்பு முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பின்னர், பத்தரமுல்லை – தியத்த உயன பகுதியிலும் போராட்டக்காரர்கள் வசந்த முதலிகேவின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து, அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.
முன்னதாக நாட்டில் ஜனாதிபதி பதவி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களாக விளங்கிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகிய மூவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்டது.
அதன்படி, அரசுக்கு எதிரான சதிகள் ஏதும் இடம்பெற்றுள்ளதா என சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணக்களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இணைந்த பொலிஸ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுக்கிறது.