கோவை மாநகர மக்களின் பொழுதுபோக்கு மையமாக திகழ்ந்த வஉசி பூங்கா தற்போது பராமரிப்பின்றி, குப்பை குவிந்து, உபகரணங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.
கோவை வஉசி பூங்கா கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இப்பூங்காவில் பல வகையான மரங்கள், வண்ண மீன் காட்சியகம், வண்ண நீரூற்று, சிறுவர் ரயில், டைனோசர் பூங்கா, இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்பட்ட விமானம், பழங்கால பீரங்கி குண்டு எறியும் கருவி ஆகியவை உள்ளன.
தினமும் வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும், வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையும் பொதுமக்கள் உள்ளேஅனுமதிக்கப்படுகின்றன.
இதற்கு அனுமதி இலவசம். தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் இந்த பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். ஆனால், சமீப காலமாக இந்த பூங்கா உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பூங்கா வளாகத்தில் முறையாக குப்பை அகற்றப்படாததால் செடி,கொடி, மரங்களின் தழைகள், காகிதங்கள், தின்பண்ட கவர்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டிக்கிடக்கின்றன. குப்பை ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர்பூங்கா வளாகத்தில் தோட்டக்கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் கட்டமைப்பு அமைக்கப்பட்டது. பெயரளவுக்கு சில வாரங்கள் இந்த உரம் தயாரிக்கும் மையம் இயங்கியது.
தற்போது இந்த மையம் பயன் பாடின்றி வீணாகி வருகிறது. பூங்கா வளாகத்தில் உள்ள வண்ண மீன் காட்சியகத்துக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. இங்கு மொத்தம் 7 தொட்டிகள் உள்ளன.
ஆனால், இதில் 4 தொட்டிகளில் மட்டுமே மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளிலும் தண்ணீரை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது கிடையாது. தண்ணீர் அழுக்காக உள்ளது.
பூங்கா வளாகத்தில் உள்ள மண்டபம் பழுதடைந்துள்ளது. செயற்கை நீரூற்றுகள் பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லை. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படையின் விமான மாதிரி, பீரங்கி ஆகியவை துருப்பிடித்து காணப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம் சிதிலமடைந்து யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு உள்ளது. டைனோசர் பூங்கா நீண்ட வருடங்களாக மூடிக்கிடக்கிறது. இதனால் இங்கு பொதுமக்கள் வருவது குறைந்து வருகிறது.
எனவே, பூங்காவை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘வண்ண மீன் காட்சியகத்தில் உள்ள தொட்டிகள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை முறையாக கழுவப்படுகின்றன. கட்டமைப்புகளை சீரமைக்க மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.