தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு 274 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவில் பேசிய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாவது: மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் மூலம் மாநில மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மாராட்டி உள்பட இந்தியாவின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒருவர் தாய்மொழியில் பயிலும்போது சிரமமான பாடங்களையும் எளிதாக கற்க முடியும். மாணவர்கள் படித்து பட்டம் பெறுவதோடு, ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து நபர்களுக்காவது வேலை தரும் வண்ணம் தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும்.
மின்னணு பரிமாற்றத்தில் இந்தியா உலக அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்குள் ஒன்றரை கோடி கிராமங்கள் ஆப்டிகல் பைபர் சேவையைப் பெறும். நமது நாடு பழமையான கலாச்சாரத்தையும் மருத்துவ முறைகளை கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் பெரிதும் உதவிகரமாக இருந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.