கேப்பாபுலவு – புலவுகுடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, வடமாகாண சபையினால் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் வடமாகாண ஆளுனர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் அனைத்து வடமாகாண சபை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது காணிகளை மீளத்தருமாறு கோரி கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரால் ஆதரவளிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைககள் நிறுவக மாணவர்கள் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களின் வாயை கறுப்புத் துணியால் கட்டியபடி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
கேப்பாபுலவு மக்களுக்கு நீதிகோரும் வகையிலான போராட்ட வாசகங்களும் காண்பிக்கப்பட்டன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பில் போராட்டம் நடத்தி வருகின்றன மக்களுக்கு ஆதரவாக பேரணியை நடத்தி இருந்தனர்.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கான உதவிகளையும் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றன.
நேற்றையதினம் மட்டக்களப்பிலும் இவ்வாறான ஆதரவு பேரணி ஒன்று நடைபெற்றிருந்தது.
திருகோணமலை சம்பூர் மக்கள் உள்ளிட்ட பலரும் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவளித்து போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
மேலும் பல ஆதரவு கூட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.