பதவிக்காலம் நிறைவு பெறும் வரை பாராளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என பொதுஜன பெரமுனவிற்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க முழுமையாக நிறைவேற்றுவார்.
அவ்வாறு ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்காவிடின் மக்கள் போராட்டம் தீவிரமடையும் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வாதுவை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் தரப்பினரது வரபிரசாதங்களுக்கு ஒன்றும் குறைவில்லை.
நிதி நெருக்கடிக்கு மத்தியில் 38 இராஜாங்க அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன்,அமைச்சரவை அமைச்சினை 40ஆக விஸ்தரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்திடம் எவ்வித விரைவான திட்டங்களும் கிடையாது.
விவசாயத்துறையை இல்லாதொழித்த தரப்பினருக்கு மீண்டும் விவசாயத்துறை தொடர்பான இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.மறுபுறம் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுக்கு அரச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கும் மக்களாணை கிடையாது.
ஆளும் தரப்பின் 134 உறுப்பினர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும்,பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய ஜனாதிபதி செயற்படுகிறார்.
தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய நாட்டு மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்கு பிறகு பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதி வசமாகும்.இருப்பினும் ஜனாதிபதி ஒருபோதும் பாராளுமன்றத்தை கலைக்கமாட்டார்.
9ஆவது பாராளுமன்றத்தின் பதவி காலம் நிறைவு பெறும் வரை எக்காரணிகளுக்காவும் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டேன் என பொதுஜன பெரமுனவுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிச்சயம் நிறைவேற்றுவார்.மக்களின் அபிலாசைகளுக்கு அமைய பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தாவிடின் மீண்டும் மக்கள் போராட்டம் தீவிரமடையும் என்றார்.