செவ்வாய்க்குப் பிறகு தேர்தலுக்கு அழைப்பு விடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் !

109 0

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் காணப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தின் விதிகளின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அத்தகைய உரிமை இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் 2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சான்றளிக்கப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ளூராட்சி, நகர சபைகள், மாநகர சபைகளின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீடிக்கவும், தேர்தலை அடுத்த மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கவும் அமைச்சு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.