படம் 1: பல்கலைக்கழகங்களிற்கு 2010 முதல் இன்று வரை அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை
இலங்கையில் நடைமுறையிலுள்ள இலவச கல்வியில், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையே மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இப்பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே மாணவர்கள் பல்கலைக்கழக பட்டக் கற்கைநெறிகளுக்கு தெரிவு செய்யப்படுகின்றார்கள்.
இலங்கையில் ஆரம்ப காலகட்டங்களில் (1980ஆம் ஆண்டுகளில்) அண்ணளவாக 1000 மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களிற்கு அனுமதிக்கப்பட்டார்கள். எனினும் காலப்போக்கில் பல்கலைக்கழகங்களிற்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது அண்ணளவாக 42,500 இற்கும் அதிகமான மாணவர்கள் அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைப் பல்கலைக்கழக பட்டக்கற்கைநெறிக்கு தெரிவு செய்யும் மிகமுக்கிய பணியினை இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.
இதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது இப்பட்டக் கற்கைநெறித் தெரிவுகளுக்காக மாணவர்களிடமிருந்து பூர்த்திசெய்த முதற்படிவத்தினை அனுப்பி வைக்குமாறு கோருகின்றது.
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்த பின்னர் குறுகிய காலத்தினுள் முதற்படிவங்களிற்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது.
ஆரம்பத்தில் இவ்விண்ணப்ப படிவங்கள் மாணவர்களுக்கு வன்பிரதிகளாக (கைநூலின் பின்னிணைப்பாக) வழங்கப்பட்டு அதனை பூர்த்திசெய்து அனுப்புமாறு கோரப்பட்டது. ஆயினும் கடந்த சில வருடங்களாக இது இணைய வழிமூலம் கையாளப்படுகின்றது.
தற்போது இணைய வழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் தரவிறக்கம் செய்யப்பட்டு அவற்றை அச்சுப்பிரதி மூலம் வன்பிரதிகளாக அனுப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படிவமானது மாணவர்களின் தனிப்பட்ட பல தகவல்களையும் அவர்களின் பட்டக் கற்கைநெறிகளுக்கான விருப்பத்தெரிவொழுங்கையும் கொண்டிருக்கும்.
முதற்படிவ விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய ஆரம்பிக்கும் முன்னதாக மீள் உறுதிப்படுத்தப்பட்ட கடவுச்சொல் கொண்ட தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி, மின்பிரதி செய்யப்பட்ட தேசிய அடையாள அட்டை என்பவற்றை தயாரக வைத்திருப்பதன் மூலம் தேவையற்ற சிரமங்களை தவிர்த்துகொள்ளலாம்.
- முதற்படிவ விண்ணப்பப்த்தை பூர்த்தி செய்தல்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையப்பக்கத்திற்கு சென்று அங்கு தரப்பட்ட முதற்படிவ விண்ணப்பத்துக்குரிய இணைப்பினை அழுத்துங்கள். அங்கு உங்களது சுட்டெண், தேசிய அடையாள அட்டை இலக்கம், அது வழங்கப்பட்ட திகதி மற்றும் நீங்கள் பரீட்சையின் போது வேறேனும் அடையாள அட்டை பயன்படுத்தியிருப்பின் அதனது இலக்கமும் வழங்கப்பட்ட திகதி ஆகியவற்றை பதிவிடுவதன் மூலம் உங்களது முதற்படிவ விண்ணப்பத்திற்கான பயனராக பதிவு செய்வதற்குரிய படிவம் தோன்றும்.
அப்படிவத்திலே முழுப்பெயர், முகவரி, கடவுச்சொல் சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி , உங்களது தனிப்பட்ட இயங்கு நிலையிலுள்ள கைத்தொலைபேசி இலக்கம் என்பவற்றை பதிவிடுதல் வேண்டும். மேலும் கடவுச்சொல் ஒன்றினை பதிவு செய்யுமாறு கோரப்படும். அதன்போது உங்களால் மீள நினைவுறுத்தக்கூடிய கடவுச்சொல் ஒன்றினைப் பதிவிடுங்கள் (இது மின்னஞ்சல் முகவரியினுடைய கடவுச்சொல்லாக இருக்கவேண்டிய அவசியமில்லை). அத்தோடு மின்பிரதி செய்யப்பட்ட தேசிய அடையாள அட்டையின் பிரதியினையும் தரவேற்றம் செய்யவேண்டும் (பிரதியின் தரத்தினை உறுதி செய்து கொள்ளவும்).
தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரி தவறாகும் போது அல்லது கடவுச்சொற்கள்; நினைவலில்லாத போது உங்களது பயனர் கணக்கினை செயற்படுத்துவதற்கான குறீயீடு கிடைக்கப்பெறாது. செயற்படுத்தற் குறியீடு இல்லாமல் உங்களது கணக்கினை செயற்படுத்தி விண்ணப்ப படிவத்தினை பெறமுடியாது. இவ்வாறான தவறிழைப்பின் உங்களது சுட்டெண்ணிற்குரிய பதிவினை தொடர முடியாது போகலாம்.
பல மாணவர்கள் தங்கள் கடவுச்சொற்களை நினைவில் வைத்துள்ளோம் என்று கூறிய போதும் முதற்படிவ கணக்கினை பூர்த்திசெய்த பின்னர் மின்னஞ்சலினை பயன்படுத்தமுடியாது என கணணித் திரையில் தெரியும் செய்தியைப் பார்த்து ஒன்றும் செய்வதறியாது தவிக்கும் தருணங்கள் நிறையவே கடந்த காலங்களில் நடந்ததுண்டு. எனவே மின்னஞ்சல் முகவரியை பதிவிடுவதற்கு முன்பாக மீளவும் பயன்படுத்தி உறுதி செய்வது மிகவும் நன்று.
எனவே பொறுமையாக இரண்டு தடவை அனைத்து தகவல்களையும் சரிபார்தது உறுதி செய்த பின்னரே பதிவு செய்யும் தெரிவினை அழுத்தவும். அதன் பின்பு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் கைத்தொலைபேசிக்கும் கிடைக்கப்பெற்ற செயற்படுத்தல் குறியீட்டை சரிவரப் பயன்படுத்துவன் மூலம் உங்கள் முதற்படிவ விண்ணப்பம் கிடைக்கப்பெறும்.
முதற்படிவத்தினை இணையத்தினூடாக பூர்த்தி செய்ய ஆரம்பிக்கும் முன் மேலே கூறிய ஆவணங்களை தயாராக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, நடப்பாண்டு பல்கலைக்கழக பட்டக் கற்கை நெறிகளுக்கான கைநூலை தரவிரக்கம் செய்து கொள்ளவும் வேண்டும். இதனை www.ugc.ac.lk எனும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்கு சென்று அங்கு “University Admissions Handbook 2021/2022” எனும்; பெயரில் PDF ஆக தரவிறக்கிக் கொள்ளலாம்.
முதற்படிவ விண்ணப்பமானது 4 படிமுறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
⦁ உங்களுடைய (விண்ணப்பதாரியின்) தனிப்பட்ட தகவல்கள்
வதிவிட முகவரி, தொலைபேசி இலக்கங்கள் (இயங்கு நிலையிலுள்ள நிலையான தொலைபேசி, உங்களுடைய தனிப்பட்ட கைத்தொலைபேசி), பரீட்சைக்கு தோற்றிய நிர்வாக மாவட்டம் மற்றும் அம்மவாட்டத்தில் நீஙகள் வசிக்க ஆரம்பித்த திகதி, வேறேனும் தொடர்பு முகவரி இருப்பின் அம்முகவரி, மற்றும் தந்தை, தாய் அல்லது பாதுகாவலரது முழுப்பெயர் மற்றும் அவர்களது தொலைபேசி இலக்கங்கள் என்பனவற்றை பதிவிடுதல் வேண்டும்.
⦁ க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சைப் பெறுபேறுகள்
க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியிய வருடமும், சுட்டெண்ணும் (தோற்றிய அனைத்து தடவைகளுக்குமுரியவை, ஓரு பாடத்திற்கு தோற்றியிருந்தாலும் கூட), க.பொ.த உயர்தரத்திற்கு தோற்றிய வருடமும், சுட்டெண்ணும் (தோற்றிய அனைத்து தடவைகளுக்குமுரியவை, ஓரு பாடத்திற்கு தோற்றியிருந்தாலும் கூட), மேலும் தொடர்ச்சியான வருடங்களில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவில்லையாயின் அதற்கான காரணங்கள் போன்ற தகவல்களை பதிவிடுதல் வேண்டும்.
⦁ விண்ணப்பதாரியின் பாடசாலை பற்றிய விபரங்கள்
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலையின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், இதுவரை கற்ற அனைத்துப் பாடசாலைகளின் பெயர், மாவட்டம், காலப்பகுதிகள் சம்மந்தமான தகவல்கள் (ஆரம்ப மற்றும் இறுதித் திகதிகள்), வேறு ஏதேனும் உயர் கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே பதிவு செய்திருந்தாலோ அல்லது உயர்கல்வி வெளிநாட்டுப் புலமைப்பிசில்களை பெற்றிருந்தாலோ அது தொடர்பான தகவல்களை பதிவிடுதல் வேண்டும்.
⦁ கற்கைநெறிகளுக்கான விருப்பத்தெரிவொழுங்கு
இது மிகவும் கவனமாகவும் விவேகமாகவும் பூர்த்திசெய்யவேண்டிய படிமுறையாகும். ஏனெனில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய பட்டக் கற்கைநெறியானது ஒவ்வொரு பட்டக் கற்கைநெறிகளினது வெட்டுப்புள்ளி (cut-off z-score) மற்றும் நீங்கள் தற்போது பூர்த்தி செய்கின்ற உங்களது விருப்பத்தெரிவொழுங்கு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. வெட்டுப்புள்ளியினை நாம் தீர்மானிக்க முடியாது ஆயினும் விருப்பத்தெரிவு ஒழுங்கு எமது தெரிவே ஆகும். எனவே விருப்பத்தெரிவு ஒழுங்கானது மிகவும் நேர்த்தியாகவும் கவனமாகவும் தீர்மானிக்கப்பட வேண்டும்.
உதாரணமாக நீங்கள் விவசாய விஞ்ஞானம், பல் மருத்துவம், மருத்துவம் எனும் ஒழுங்கில் உங்களது விருப்பத்தெரிவினை பூர்த்தி செய்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களது இசற்புள்ளி மருத்துவப் பட்டக் கற்கைநெறிக்கான வெட்டுப்புள்ளியை விட அதிகமாக இருப்பினும், நீங்கள் விருப்பத்தெரிவு ஒழுங்கில் முதலாவதாக விவசாய விஞ்ஞான பட்டக் கற்கைநெறியினை குறிப்பிட்டிருந்ததால் உங்களுக்கு விவசாய விஞ்ஞான பட்டக் கற்கை நெறியே கிடைக்கப்பெறும்.
க.பொ.த. உயர்தரத்திற்குரிய ஒவ்வொரு பாடத்துறைக்கும் (உதாரணமாக கணிதத்துறை எனப்படும் இணைந்த கணிதம், இராசயனவியல், பௌதிகவியல் எனும் பாடங்களைக் கொண்ட துறைக்குரிய பட்டக்கற்கை நெறிகள் கைநூலில் பௌதிக விஞ்ஞானத்துறை எனும் பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்) அவற்றிற்கேற்றாற்போல் அதிகளவிலான பட்டக் கற்கைநெறிகளை இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. இக்கைநூலில் ஒவ்வொரு பட்டக் கற்கைநெறி தொடர்பான விளக்கங்களும் அதற்குத் தேவையான குறைந்தளவு தகுதி பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே இக்கைநூலை முற்றாக வாசித்து தங்கள் பாடத்துறைக்கு பொருத்தமான பட்டக் கற்கைநெறிகளை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் குறிப்பிட்டளவிலான பட்டக் கற்கைநெறிகள் எல்லாப் பாடத்துறை சார்ந்தோருக்கும் கிடைக்கக்கூடியவை (அதாவது க.பொ.த. உயர்தரத்தில் நீங்கள் கற்ற பாடத்துறை எதுவானாலும் இவ்வாறான பட்டக் கற்கைநெறிகளை நீங்கள் தெரிவு செய்ய முடியும்). எனவே அவற்றையும் தெரிவு செய்து கொள்ள வேண்டும். அநேகமான கற்கைநெறிகள் ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களினால் வழங்கப்டுகிறது. எனவே அதனை கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
நீங்கள் தெரிவு செய்த ஒவ்வொரு பட்டக் கற்கைநெறிகளுக்குமுரிய அனைத்து விளக்கங்களும் கைநூலில் தரப்பட்டிருக்கும். உதாரணமாக எத்தனை வருடக்கற்கைநெறி, மொழிமூலம், தெரிவு செய்யப்படும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை, பட்டக் கற்கைநெறிக்கான பெயரீட்டு எண்கள் மற்றும் மேலதிகமான தகைமைகள் என்பவை தரப்பட்டிருக்கும். அதாவது சில பட்டக் கற்கைநெறிகளுக்கு க.பொ.த சாதாரண தரத்தில் ஆங்கிலம் மற்றும், கணிதத்தில் திறமைச்சித்தி கோரப்படும். மேலும் சில கற்கைநெறிகளுக்கு குறித்த பல்கலைக்கழகம் நடாத்தும் பொது உளச்சார்புப் பரீட்சைக்கு தோற்றி சித்தி பெறுதல் வேண்டும். இப்பரீட்சைக்காக குறித்த பல்கலைக்கழகங்களினால் பத்திரிகைகள் மற்றும் இணைய வாயிலாக அறியத்தரப்படும் போது விண்ணப்பிக்க வேண்டும்.
- மாதிரி விருப்பத்தெரிவொழுங்கினை தயார் செய்தல்
கைநூலிலிருந்து உங்களுக்குப் பொருத்தமான பட்டக் கற்கைநெறிகளையும் அவற்றுக்குரிய பல்கலைக்கழகம் மற்றும் குறியீட்டு எண்களையும் பெற்று ஒரு தாளிலோ அல்லது Microsoft Excel இலோ பின்வருமாறு ஒரு மாதிரி அட்டவணையை (அட்டவணை 1) உருவாக்கிக்கொள்ளுங்கள். அப்பட்டியலில் உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு விருப்பத்தெரிவினை இடுங்கள். தேவையேற்படின் ஒன்றுக்கு மேற்பட்ட மாதிரிகளின் பிரதிகளை உருவாக்கி விருப்பத்தெரிவொழுங்கிலே உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்களை பரிசீலித்து, சுயதிருப்தி கொள்ளும்வரை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கீழே தரப்பட்டுள்ள மாதிரி அட்டவணையை (அட்டவணை 1) நோக்கவும்.
ஒரு குறித்த பட்டக் கற்கைநெறியினைத் தெரிவு செய்யும் போது அதே பட்டக் கற்கைநெறியானது ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படுமாயின், அப்பட்டக் கற்கை நெறியினை எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் அடுத்தடுத்ததாக விருப்பத்தெரிவு இட்டதன் பின்னரே ஏனைய கற்கை நெறிகளுக்கு விருப்பத்தெரிவுகளை இட வேண்டும் (அட்டவணை 1). இரு வேறு பட்டக் கற்கைநெறிகளை ஒன்றுடன் ஒன்று கலப்பது அர்த்தமற்ற விருப்பத்தெரிவொழுங்காகவே அமையும் என்பது எனது கருத்து. மேலே காட்டியது போன்று மாதிரி அட்டவணையிலே (அட்டவணை 1). 1,2,3…… என்று தெரிவுகளை இட்டபின் இறுதியாக நீங்கள் முடிவு செய்த விருப்பத்தெரிவொழுங்கினை முதற்படிவத்திலே பட்டக் கற்கைநெறி / பல்கலைக்கழகம் எனும் வடிவத்திலேயே உள்ளிட வேண்டும் (படம் 2a இல் காட்டியதுபோன்று).
விருப்பத்தெரிவொழுங்கினை தீர்மானிப்பதில் விரும்பத்தக்க அணுகுமுறைகள்.
⦁ நடப்பாண்டு பல்கலைக்கழக பட்டக் கற்கை நெறிகளுக்கான கைநூலை தரவிறக்கம் செய்து அந்நூலிலுள்ள கற்கைநெறிகளின் தகவல்களை புரிந்து கொள்ளுதல்.
⦁ யாரேனும் ஓர் ஆசிரியருடனோ அல்லது இது சார்பான விடயங்களில் தெளிவுள்ளவர் ஒருவருடனோ கலந்தாலோசித்தல்.
⦁ நன்கறிந்த சிரேஸ்ட மாணவர்களின் ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களினையும் பெறுதல்.
⦁ தெரிவு செய்த பட்டக் கற்கைநெறியினை அதனை வழங்கும் எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் தொடர்சியாக விருப்பத்தெரிவொழங்கினை இட்ட பின்னேரே ஏனைய பட்டக் கற்கைநெறிகளுக்கான விருப்பத்தெரிவினை இடுதல்.
⦁ உங்களுக்குக் கிடைக்;;கக் கூடிய அனைத்துப் பட்டக் கற்கை நெறிகளுக்கும் விருப்பத்தெரிவினை தவறாது இடுதல்.
⦁ பெற்றுக்கொண்ட எல்லா தகவல்களையும் தொகுத்து நீங்களே பகுத்தாராய்ந்து பட்டக் கற்கைநெறி விருப்பத்தெரிவொழுங்கின் மாதிரியினை தயார் செய்தல்.
விருப்பத்தெரிவொழுங்கினை தீர்மானிப்பதில் விரும்பத்தகாத அணுகுமுறைகள்
⦁ வேறொரு நபரின் விருப்பத்திற்கேற்றாற் போல் விருப்பத்தெரிவொழுங்கினை இடுதல்.
⦁ பல்கலைக்கழக அமைவிடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கேற்றவாறான விருப்பத்தெரிவொழுங்கினை தீர்மானித்தல்.
⦁ நண்பர்களுடன் சேர்ந்து ஒரே பல்கலைக்கழகத்திற்கு செல்வதை மனதில் வைத்து விருப்பத்தெரிவொழுங்கை தீர்மானித்தல்.
⦁ எனது இசற்புள்ளிக்கு இவ்வாறான பட்டக் கற்கைநெறிகள் கிடைக்க வாய்ப்பில்லை என்றெண்ணி சில பட்டக் கற்கைநெறிகளை விருப்பத்தெரிவொழுங்கினுள் சேர்க்காது விடல்.
⦁ தவறான வழிகாட்டல்களிற்கு செவிமடுத்தல்.
படம் 2(b): மாதிரி இறுதிப்பிரதி (PDF) (விருப்பத்தெரிவொழுங்கு)
இறுதியாக, ஏதாவது ஒரு சேவை நிலையத்தினை அணுகுவதன் மூலம் (வலயக்கல்வி அலுவலகங்களின் கணினிவளப்பிரிவு, ஏனைய சேவை நிலையங்கள்) உங்கள் முதற்படிவத்தினை பூர்த்தி செய்வது இலகுவாக இருக்கும். இருமுறை சரிபார்த்த பின்பே படிவத்தினை நிறைவு செய்தல் வேண்டும். ஏனெனில், நிறைவு செய்யும் தெரிவிவனை அழுத்திய பின் மாற்றங்கள் எதனையும் செய்ய முடியாது. முதற்படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகவல்களில் ஏதாவது ஒரு தரவேனும் சரியான முறையிலே பூர்த்தி செய்யப்படாதவிடத்து அவ்விண்ணப்பப்படிவமானது நிராகரிக்கப்படுவது வழமையாகும். நிறைவு செய்த பின்னர் உங்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் தரவிறக்கமடைவதோடு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும்.
பின்னர் அதன் மூலம் பெறப்படும் PDF (படம் 2( b) யில் காட்டியது போன்று) படிவத்தினை அச்சிட்டுக் கொள்ளுங்கள். அந்த PDF படிவத்திலே க.பொ.த. சாதரண தர பெறுபேற்றுச் சான்றிதழ்களிற்காகவும் தேவையெற்படின் சில உறுதிமொழிக் கடிதங்களிற்காகவும் (இரு பக்கங்களிற்கும்) பார் கோடுகள் (Bar Codes) தரப்பட்டடிருக்கும். கைநூலில் கோரப்பட்டுள்ள தேவையான மேலதிக ஆவணங்களில் அவற்றிற்குரிய பார் கோடுகளை வெட்டி ஒட்டுங்கள். இதனோடு பகிடிவதை சட்டதிட்டங்கள் தொடர்பான உறுதிமொழிக் கடிதம் ஒன்றும் உங்களிடம் கோரப்படும். அச்சிடப்பட்ட PDF விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கையொப்பமிட்டு, பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தல்; கையொப்பத்தினை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
எல்லா ஆவணங்களையும் மீள ஒருமுறை சரிபார்த்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சரியான முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். இதன் போது எல்லா ஆவணங்களினதும் நிழற்பிரதி ஒன்றினை வைத்துக்கொண்டு அனுப்புதல் சிறந்ததாகும். குறிப்பிட்ட காலத்தின் பின், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விண்ணப்பத்தினை பரிசீலித்து உங்களுக்கான பட்டக் கற்கைநெறி தெரிவு செய்யப்படும். அக்கற்கைநெறிக்குரிய அனுமதிக்கடிதத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட பின்பு மென்;பிரதியாக அதனது இணையத்தளத்தினூடாக தரவிறக்கம் செய்ய முடியம். அதன் பின்னர் கைநூலில் குறிப்பிட்டது போன்று குறித்த தொகையினை வைப்புச்செய்து அதன் பற்றுச்சீட்டினைப் பெற்று அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பொருத்தமான இணையப்பக்கத்தில் மேலதிக தகவல்களுடன் பதிவு செய்யவேண்டும். அதனை அடிப்படையாக வைத்து அந்தந்தப் பல்கலைக்கழகத்திற்கேற்றவாறு உங்கள் பல்கலைக்கழக பதிவினை மேற்கொள்ளல் வேண்டும்.
காத்திருப்புப் பட்டியலும் பட்டக் கற்கைநெறிக்கான மாற்றங்களும்
மேலும் சில சந்தர்ப்பங்களில் நீங்கள் பட்டக் கற்கைநெறியினைத் தொடர்ந்து கொண்டீருக்கும் போது, உங்களுக்கு கிடைக்கப்பெற்ற பட்டக் கற்கைநெறியினைக் காட்டிலும் உயர் விருப்பத் தெரிவொழுங்கிலே உள்ள இன்னுமொரு பட்டக் கற்கை நெறிக்கான வெற்றிடம் வரும்போது உங்களுக்கு மீண்டும் இன்னோர் தெரிவுக்கடிதம் உயர் விருப்பத்தெரிவைக் கொண்ட பட்டக் கற்கைநெறியினை தொடரக் கிடைக்கப்பெறும் (காத்திருப்புப் பட்டியல்). இந்த காத்திருப்புப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இரண்டு அல்லது மூன்று தவணைகள் கூட இவ்வெற்றிடங்களை நிரப்பும் பணியானது தொடர்ச்சியாக நிகழ வாய்ப்புண்டு. இவ்வாறு அழைப்புக்கடிதம் வரும்போது நீங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் விருப்பத் தெரிவொழுங்கிற்கேற்ப மேலே (உயர் தெரிவு) உள்ள பட்டக் கற்கைநெறிக்கு செல்லலாம்.
முதன்முறை கிடைத்த பட்டக் கற்கைநெறிக்கான பல்கலைக்கழகத்தில் கற்கைநெறியினைத் தொடரும் போது காத்திருப்புப் பட்டியலில் மேலே உள்ள பட்டக் கற்கைநெறிக்கு செல்வதனை நீங்கள் விரும்பவில்லை எனின், உங்களது முதலாவது பட்டக் கற்கைநெறி தெரிவுக்கடிதம் கிடைத்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய பின்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பொருத்தமான இணையப்பக்கத்திலே தங்கள் பதிவினை மீள்திருத்த அனுமதிக்கும் போது ஏனைய உயர் விருப்பத் தெரிவொழுங்கிலே உள்ள, நீங்கள் இனியும் தெரிவு செய்யப்பட விரும்பாத பட்டக் கற்கைநெறிகளை (Promotion Declaration எனும் இணைப்பின் மூலம்) நீக்கி விட வேண்டும்.
அவ்வாறு மீள்திருத்தவில்லையாயின் நீங்கள் உங்கள் விருப்பத் தெரிவொழுங்கிலே மேலே உயர் தெரிவு செய்த பட்டக் கற்கைநெறி எதுவானாலும் அதற்கு காத்திருப்புப் பட்டியலின் மூலம் அனுமதி பெற்றால் மறுக்காது செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும். இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்களை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் கைநூலில் 4.2 பகுதியில் வாசித்து அறிந்து கொள்ளவும்.
முதற்படிவத்தை ஆரம்பத்திலேயே சரிவரப் பூர்த்திசெய்வீர்களாயின் இவ்வாறான பிரச்சினைகைளை இலகுவாகத் தவிர்த்துக் கொள்ளலாம். எனவே முதற்படிவத்தினை பூர்த்தி செய்யும் போது மிகுந்த சிரத்தையுடனும் சீராகவும் தெளிவாகவும் கவனமாகவும் பிழைகளோ தடுமாறல்களோ இன்றி பூர்த்தி செய்தல் மிகமிக முக்கியமானதொன்றாகும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினது கல்வியாண்டு 2021/2022 கைநூலில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்வது சார்பான அனைத்து தகவல்களும் (பட விளக்கங்களுடன்) பகுதி 5 இலும் பொதுவான பிரச்சiகைகளுக்குரிய வினாக்களும் அவற்றிற்கான விடைகளும் பகுதி 8 இலும் மற்றும் மேன்முறையீட்டு விண்ணப்ப படிவம், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் விசேட திறமையுள்ள மாணவர்களிற்குரிய விண்ணப்ப படிவம், மாற்றுத்திறனாளிகளிற்கான விண்ணப்ப படிவம் என்பவை பகுதி 10 இலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பல்கலைக்கழக பட்டக் கற்கைநெறியினை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும், குடும்பத்திற்கும் அதேபோல உங்கள் சமூகத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆகவே பொருத்தமான தகவல்களை மிகச்சரியாக உள்வாங்கி அதற்குரிய சரியான கைமுறைகளையும் நுணுக்கங்களையும் முதற்படிவ விண்ணப்பத்தின் போது கையாளுவதன் மூலம் பல்கலைக்கழக அனுமதியினை முறையாக கைப்பற்ற முடியும். இறுதியாக இலங்கையின் இலவசக் கல்வி வாய்ப்பிற்கு நன்றி கூறுவதோடு உங்கள் அனைவருக்கும் நீங்கள் விரும்பும் உயர்கல்வியினை பெற்று வாழ்வில் சிறப்படையலாம்
தங்கத்துரை கார்த்தீஸ்வரன் விரிவுரையாளர்
வவுனியாப் பல்கலைக்கழகம், இலங்கை