சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்தவரும் தற்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணல் தொடர்பாகத் சிறிலங்காவைச் சேர்ந்த அவதானிப்பாளர்கள் தற்போது உரையாடி வருகின்றனர்.
சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணலின் குறித்த ஒரு பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பில் இந்த நாடானது தற்போது எந்த நிலையில் உள்ளது என ஊடகவியலாளர் உபல் விக்கிரமசிங்க, குமாரதுங்கவிடம் வினவியிருந்தார்.
‘இது மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது’ என குமாரதுங்க பதிலளித்திருந்தார். ‘நல்லிணக்கத்தை மேற்கொள்வதற்கு எதிர்க்கட்சியினர் மற்றும் தீவிர தேசியவாதிகளிடமிருந்து பல்வேறு எதிர்ப்புக்கள் காண்பிக்கப்படுகின்ற போதிலும், பெரும்பான்மை மக்களின் ஆசிர்வாதங்களுடன் நல்லிணக்கச் செயற்பாடுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட செயற்பாடாகும். புதிய அரசியல் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதே தற்போதைய தேவையாக உள்ளது. அதன் பின்பே காணாமற் போனோருக்கான அலுவலகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இவை நிறைவேற்றப்படும் போது, போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டிய அவசியமில்லை’ என சந்திரிக்கா குமாரதுங்க தனது நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
குமாரதுங்கவின் இந்த அறிக்கையானது பல்வேறு காரணங்களுக்காக ஆராயப்பட வேண்டும். இவற்றுள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
ஏனெனில் 1983 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்திற்கான அடிப்படைப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையில் நல்லிணக்கச் செயற்பாடானது ‘வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றது’ என்கின்ற குமாரதுங்கவின் பதிலானது மிகவும் நகைப்பிற்குரியதாகும்.
குறிப்பாக ‘போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நீதிமன்றங்களை அமைப்பதற்கு எவ்வித அவசியமுமில்லை’ என்கின்ற குமாரதுங்கவின் கருத்தானது இங்கு நோக்கப்பட வேண்டும். குமாரதுங்க தனது நேர்காணலில் இவ்வாறு கூறியதானது இவர் தற்போது வகிக்கும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் பதவிக்குப் பொருத்தமுடையதல்ல. ஆகவே இவ்வாறான எதிர்மறையான மனப்போக்கைக் கொண்ட ஒருவர் இந்தப் பதவியை வகிப்பது பொருத்தமானதா?
யுத்த கால மீறல்கள் என்பது மிகவும் சிக்கலான மற்றும் எளிதில் தீர்க்க முடியாத ஒரு விவகாரமாகும். சிறிலங்காவின் பெரும்பான்மை இனமான சிங்களவர்களை மட்டும் கொண்ட சிறிலங்கா இராணுவத்தினர் இவ்வாறான மீறல்களில் ஈடுபட்டதால் இது ஒரு சிக்கலான விவகாரமாகவே காணப்படுகிறது. மிகக் கொடிய உள்நாட்டு யுத்தத்தை வெற்றி கொண்டமைக்காக சிறிலங்கா இராணுவத்தினரை சிங்கள மக்கள் பாராட்டி வருகின்றனர். ஆகவே இவ்வாறு தமக்கு வெற்றியை ஈட்டித் தந்த இராணுவ வீரர்கள் யுத்தக் குற்ற விசாரணைக்காக நிறுத்தப்படுவதை இந்த மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
மறுபுறத்தே, நாட்டில் நிலையான அமைதியை எட்டுவதற்கு, ஒரு நம்பகமான பொறுப்புக் கூறல் செயற்பாடு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் இவ்வாறான நம்பகமான விசாரணை இடம்பெறுவதற்கான எவ்வித சாதகமான சூழ்நிலையும் காணப்படவில்லை.
மேலும், நாட்டின் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாகவும் குமாரதுங்க கருத்து தெரிவித்திருந்தார். இடைக்கால நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் எவ்வித சமரசங்களும் எட்டப்படவில்லை. தவிர, சிறிலங்காவில் பரிந்துரைக்கப்பட்ட இடைக்கால நீதிப் பொறிமுறைகளான ‘உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கான ஆணைக்குழு மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு ஆகிய நான்கு ஆணைக்குழுக்களில் எந்தவொன்றும் செயற்படவில்லை.
காணாமற்போனவர்களுக்கான அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்றில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் இன்னமும் இது செயற்படுத்தப்படவில்லை. அத்துடன் பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதற்கான எவ்வித காலஅவகாசமும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
இந்நிலையில், போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கான நீதிச் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்க முடியாது. அத்துடன் பரந்த இடைக்கால நீதிச் செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் இந்த அரசாங்கம் எவ்வளவு தூரம் தீவிரமாகச் செயற்படுகின்றது என்பதையும் மீளவும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
குமாரதுங்க அண்மையில் வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்களிலிருந்து அவரது தனிப்பட்ட ஆளுமையை அளவிட்டுக் கொள்ள முடியும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான குமாரதுங்கவின் எண்ணங்கள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணங்களிலிருந்து எவ்வித வேறுபாட்டையும் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு கெட்டவாய்ப்பாகும்.
வழிமூலம் – Huffington post
ஆங்கிலத்தில் – Taylor Dibbert
மொழியாக்கம் – நித்தியபாரதி